இந்தியாவால் முடியாததை சாதித்த ஆப்கானிஸ்தான்- வங்கதேசத்தை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி சரித்திர சாதனை வெற்றி

AFg vs BAN
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் விளையாடும் இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆப்கானிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் ஜூலை 8ஆம் தேதி நடைபெற்ற இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் ரஹ்மத்துல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாட்ரான் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக ரன்களை குவித்தனர். குறிப்பாக முதல் போட்டியை போலவே சுமாராக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் பவுலர்களை நங்கூரமாக நின்று அடித்து நொறுக்கி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

சாதனை வெற்றி:
நேரம் செல்ல செல்ல வங்கதேச பவுலர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு 37 ஓவர்கள் வரை அதிரடியாக செயல்பட்டு 256 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய இந்த ஜோடியில் குர்பாஸ் 13 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்து 145 (125) ரன்களை விளாசி அவுட்டானார். சொல்லப்போனால் அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆப்கானிஸ்தான் ஜோடி என்ற சாதனையும் அவர்கள் படைத்தனர்.

இதற்கு முன் 2010ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக கரீம் சாதிக் – முகமத் சேஷாத் ஆகியோர் 218* ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அவரை தொடர்ந்து வந்த ரஹீல் ஷா 2, கேப்டன் ஷாஹிதி 2, நஜிபுல்லா ஜாட்ரான் 10, ரசித் கான் 6 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்று சதமடித்த இப்ராஹிம் ஜாட்ரான் 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் 100 (119) ரன்கள் குவித்து அவுட்டாக கடைசியில் முகமது நபி அதிரடியாக 25* (15) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 331/9 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது. இதற்கு முன் 2022இல் இலங்கைக்கு எதிராக பல்லகேலே நகரில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் 318/8 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். மறுபுறம் சுமாராக செயல்பட்ட வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிஷர் ரகுமான், ஹசன் மஹ்முத், சாகிப் அல் ஹசன், மெஹதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 332 என்ற கடினமான இலக்கை துரத்திய வங்கதேசம் தங்களுடைய பவுலிங்கை விட மோசமாக பேட்டிங் செய்தது. அதற்கேற்றார் போல் ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததால் அதற்கு தாக்குப் பிடிக்க முடியாத வங்கதேசம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 43.2 ஓவரிலேயே வெறும் 189 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

கேப்டன் லிட்டன் தாஸ் 13, சாகிப் அல் ஹசன் 25, மெஹதி ஹசன் 25 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக முஸ்பிக்கர் ரஹீம் போராடி 69 (85) ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி, முஜீப் ஊர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் வாயிலாக 142 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டில் பெரிய வெற்றியை சுவைத்து சாதனை படைத்தது.

இதற்கு முன் 2019இல் பெல்பஸ்ட் நகரில் அயர்லாந்தை 126 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே முந்தைய சாதனையாகும். அதை விட 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிராக ஒரு தொடரை வென்று சரித்திரம் படைத்தது. சொல்லப்போனால் கடந்த 2015 உலக கோப்பைக்கு பின் 2016 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் தோனி மற்றும் ரோகித் தலைமையிலான இந்தியாவை தங்களது சொந்த மண்ணில் வங்கதேசம் தோற்கடித்தது.

 இதையும் படிங்க:TNPL 2023 : கடைசி பந்தில் மாறிய வெற்றி, எலிமினேட்டரில் அதிரடி காட்டிய நெல்லை – மதுரை வீரத்தை நூலிழையில் அடக்கியது எப்படி?

அத்துடன் தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளையும் தோற்கடித்து சொந்த மண்ணில் புலியாக செயல்பட்டு வரும் வங்கதேசம் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே 2 முறை தோற்றது. அந்த வகையில் இந்தியாவால் தோற்கடிக்க முடியாத வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்து சாதித்துள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement