106 ரன்ஸ்.. இலங்கைக்கு டஃப் கொடுத்த மாமன் – மாப்பிளை ஜோடி.. ஆப்கானிஸ்தான் சாதிக்குமா?

- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கொழும்புவில் பிப்ரவரி இரண்டாம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 91, நூர் அலி ஜாட்ரான் 31 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை தங்களுடைய சொந்த மண்ணில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 439 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அனுபவ வீரர்கள் ஏஞ்சலோ மேத்தியூஸ் சதமடித்து 141, தினேஷ் சண்டிமால் 107 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

கலக்கிய மாமன் – மாப்பிள்ளை:
ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நவீட் ஜாட்ரான் 4 விக்கெட்களை சாய்த்தார். அதன் பின் 241 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் எளிதாக தோற்கும் என்று பார்க்கப்பட்டது. இருப்பினும் இப்ராஹிம் ஜாட்ரான் – நூர் அலி ஜாட்ரான் ஆகிய ஓப்பனிங் ஜோடி ஆரம்பத்திலேயே நங்கூரமாக நின்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சொல்லப்போனால் இப்போட்டியில் 22 வயதாகும் தன்னுடைய மாப்பிள்ளை இப்ராஹிம் ஜாட்ரான் கைகளில் 35 வயதாகும் நூர் அலி ஜாட்ரான் அறிமுகத் தொப்பியை பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வகையில் மாமனும் மாப்பிள்ளையும் சேர்ந்து ஓப்பனிங்கில் களமிறங்கி ஒன்றாக சேர்ந்து இலங்கைக்கு சவால் கொடுத்து 106 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆப்கானிஸ்தானுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதில் நூர் அலி ஜாட்ரான் 47 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ரஹ்மத் ஷா நங்கூரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடிய இப்ராஹிம் ஜாட்ரான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த நான்காவது ஆப்கானிஸ்தான் வீரராக சாதனை படைத்து 101* ரன்கள் குவித்துள்ளார். அவரது நல்ல ஆட்டத்தால் 3வது நாள் முடிவில் 199/1 ரன்கள் எடுத்துள்ள ஆப்கானிஸ்தான் இன்னும் இலங்கையை விட 42 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இதையும் படிங்க: இதற்கு முன் இங்கிலாந்து 399+ ரன்களை 4 ஆவது இன்னிங்சில் சேசிங் செய்துள்ளதா? – விவரம் இதோ

களத்தில் ரஹ்மத் ஷா 46* ரன்களுடன் உள்ளார். தற்போதைய நிலைமையில் இன்னும் ஒன்பது விக்கெட்டுகளை கை வசம் வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கடுமையாக போராடி 200 – 300 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதல் சரித்திர வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். ஏனெனில் பொதுவாகவே இலங்கை மண்ணில் 4வது இன்னிங்சில் 120 – 150 ரன்களை கூட சேசிங் செய்வது கடினமாக இருந்து வருகிறது.

Advertisement