
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தங்களது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் வலுவான இங்கிலாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அதனால் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது. அத்துடன் வலுவான இங்கிலாந்தை இத்தொடரிலிருந்து வெளியேற்றிய அந்த அணி செமி ஃபைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
அடுத்ததாக வலுவான ஆஸ்திரேலியாவை தங்களுடைய கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சந்திக்கிறது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் வலுவான ஆஸ்திரேலியாவை சாய்ப்பது அவ்வளவு சுலபமல்ல என்றே சொல்லலாம்.
குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் 91-7 என ஆஸ்திரேலியாவை மடக்கிய ஆப்கானிஸ்தான் கண்டிப்பாக வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது காயத்துடன் ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய கிளன் மேக்ஸ்வெல் 201* ரன்கள் விளாசி வெற்றியைப் பறித்ததை மறக்க முடியாது. இந்நிலையில் மேக்ஸ்வெலை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹசமத்துல்லா ஷாஹிதியிடன் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கொடுத்த நெத்தியடி பதில் பின்வருமாறு. “நாங்கள் மேக்ஸ்வெலுக்கு எதிராக மட்டுமே விளையாட வந்துள்ளோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நாங்கள் மொத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் திட்டங்களை வகுக்கிறோம். 2023 உலகக்கோப்பையில் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடினார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அது வரலாற்றின் ஒரு அங்கம்”
“அந்த தோல்விக்குப்பின் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை நாங்கள் தோற்கடித்து பதிலடி கொடுத்தோம். அந்த வகையில் நாங்கள் ஒரு வீரரை மட்டும் பார்க்காமல் மொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டங்களை வகுத்து தயாராகி வருகிறோம். ஆஸ்திரேலியா உலகில் மிகவும் சிறந்த கடினமான அணி. ஒவ்வொரு அணிகளும் எதிரணிகளின் பலம் பலவீனங்களை படித்து அதற்கு தகுந்தார் போல் தங்களது திட்டங்களை வகுப்பார்கள்”
இதையும் படிங்க: அதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடும் பேச்சுக்கே இடமில்லை.. கவாஸ்கர் வெளிப்படை
“அதே போல நாங்கள் எங்களுடைய சொந்த திட்டங்களை வைத்துள்ளோம். ஆனால் அதைப் பகிர்வதற்கு இது சரியான இடம் கிடையாது. அதை எங்களுடைய அணியிலேயே வைத்து களத்தில் நாங்கள் செயல்படுத்துவோம்” எனக் கூறினார். 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மட்டுமின்றி நியூசிலாந்தையும் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்குச் சென்றது. அதே போல இத்தொடரிலும் ஆப்கானிஸ்தான் செமி ஃபைனல் செல்ல முயற்சிக்க தயாராக உள்ளது.