ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் தங்களுடைய நாட்டுக்கு வந்து விளையாடுமாறு பாகிஸ்தான் வாரியம் இந்தியாவுக்கு பலமுறை அழைப்பு விடுத்தது. ஆனால் பாகிஸ்தானில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடைபெறுவதால் அங்கே சென்று விளையாட முடியாது என்று இந்தியா அறிவித்து விட்டது. அதனால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது.
அதன் படி துபாயில் விளையாடும் இந்தியா தங்களது முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசம் மற்றும் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை தோற்கடித்தது. அதனால் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா ஒருவேளை ஃபைனலுக்கு தகுதி பெற்றாலும் துபாயில் விளையாடும். மறுபுறம் நடப்பு சாம்பியனாக விளையாடி பாகிஸ்தான் அடுத்தடுத்த தோல்விகளால் லீக் சுற்றுடன் வெளியேறியது.
பேச்சுக்கே இடமில்லை:
இந்நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகள் விளையாடும் போது நீங்களும் வந்து விளையாடலாமே என சுனில் கவாஸ்கரிடம் சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கோரிக்கை வைத்தனர். இல்லையென்றால் பொதுவான இடத்தில் இருதாரப்பு தொடரில் கூட விளையாடலாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இந்திய எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகளை நிறுத்தும் வரை அதற்கு வாய்ப்பில்லை என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
இது பற்றி டென் ஸ்போர்ட்ஸ் எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகவும் எளிமையானது. இரு நாடுகளின் எல்லையில் அமைதி நிலவுவதே அதற்கான ஒரே வழி. ஒருவேளை அங்கே அமைதி நிலவினால் இருநாட்டு அரசுகளும் “சரி எல்லையில் எந்த பிரச்சினைகளும் இல்லை. இப்போது நாம் மீண்டும் விளையாடுவதைப் பற்றி பேசலாம்” என்று பேசத் துவங்குவார்கள்”
கவாஸ்கர் உறுதி:
“இப்போதும் அந்த பேச்சுவார்த்தைக்கான பின்னணி நடவடிக்கைகள் சென்று கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் இதுவரை எல்லையில் அமைதி நிலவுவதாக நாங்கள் கேட்கவில்லை. அதனாலேயே இந்திய அரசு “இவை அனைத்தும் நிற்கும் வரை ஒன்றாக விளையாடுவது பற்றிய பேச்சு வார்த்தை கூட நடத்தப்படாது” என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 0 வெற்றி மழையின் கருணையால் 1 புள்ளியுடன் வீட்டுக்கு கிளம்பிய பாகிஸ்தான்.. எவ்வளவு பரிசுத்தொகை பெறும்?
இந்த நிலைமையில் அடுத்த வருடம் 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. அந்தத் தொடரில் இந்தியாவுக்கு சென்று விளையாடாத பாகிஸ்தான் தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாட உள்ளது. அந்த வகையில் இந்த பிரச்சினை தற்போதைக்கு முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



