
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் 5வது லீக் போட்டி ஜூன் நான்காம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு கயானா நகரில் ஐந்தாவது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 183/5 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே 154 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த துவக்க வீரர்களில் ரஹமதுல்லா குர்பாஸ் அதிரடியாக 76 (45) ரன்களும் இப்ராஹிம் ஜாட்ரான் 70 (46) ரன்களும் அடித்தனர். உகாண்டா சார்பில் அதிகபட்சமாக கொஸ்மஸ் 2, கேப்டன் மசாபா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அபார வெற்றி:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய உகாண்டா அணி ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது. அந்த வகையில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 16 ஓவரில் வெறும் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ராபின்சன் ஓபுயா 14 ரன்கள் எடுத்தார்.
அதனால் 125 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் இந்த டி20 உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ளது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அட்டகாசம் செய்த ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி 5, நவீன்-உல்-ஹக் 2, கேப்டன் ரசித் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி 4 ஓவரில் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதன் வாயிலாக டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக முஜீப் உர் ரஹ்மான் 20 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார்.
இதையும் படிங்க: ஐபிஎல்’லை ஓவர்டேக் செய்த ஐசிசி.. 2024 டி20 உலகக் கோப்பை பரிசுத்தொகை அறிவிப்பு.. ஆறுதல் பரிசு வேற லெவல்
இதற்கு முன் 2022 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தின் ஷாம் கரன் 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.
இந்தியாவில் நடைபெற்ற கடந்த 2023 உலகக் கோப்பையில் அசத்திய ஆப்கானிஸ்தான் இங்கேயும் கத்துக்குட்டியான உகாண்டாவை சுருட்டு வீசி தங்கள் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. மறுபுறம் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடிய உகாண்டா தங்களுடைய அறிமுக போட்டியிலேயே குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.