வெறும் 3 ரன்ஸ்.. கடைசி பந்தில் சிக்ஸர்.. இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சரித்திர வெற்றியை பெற்றது எப்படி?

SL vs AFG 2
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை தங்களுடைய சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற இந்த தொடரில் முதல் இரண்டு வென்ற இலங்கை ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசிப் போட்டி பிப்ரவரி 21ஆம் தேதி தம்புலாவில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 209/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் சிறப்பான துவக்கத்தை கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் அசரத்துல்லா சாஸாய் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 45 (22) ரன்கள் விளாசினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ரகமனுல்லாஹ் குர்பாஸ் அரை சதமடித்து 70 (43) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சாதனை வெற்றி:
இறுதியில் அசமத்துல்லா ஓமர்சாய் 31 (23) முகமது நபி 16 (14) முகமது இசாய்க் 16* (8) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக தனஞ்செயா டீ சில்வா 2, மதிஷா பதிரனா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 210 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா அதிரடியாக விளையாடிய போதிலும் குசல் மெண்டிஸ் 16, குசால் பெரேரா 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அந்த நிலையில் வந்த கேப்டன் ஹசரங்கா 13 (11) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நிசாங்கா 8 பவுண்டரி 2 சிக்சருடன் 60 (30) ரன்கள் குவித்த போது துரதிஷ்டவசமாக காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதை தொடர்ந்து வந்த கமிண்டு மெண்டிஸ் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் தன்னுடைய பங்கிற்கு அதிரடி காட்ட முயற்சித்த சமரவிக்ரமா 23 (12) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் அப்போது வந்த அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 4 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தசுன் சனாகா 13 (8) ரன்களில் ரன் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் எதிர்ப்புறம் வெளுத்து வாங்கிய மெண்டிஸ் அரை சதமடித்ததால் வெற்றியை நெருங்கிய இலங்கைக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது.

வஃபாதர் மொமண்ட் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த மெண்டிஸ் இரண்டாவது பந்தில் ரன் எடுக்காமல் மூன்றாவது பந்தில் பவுண்டரி எடுத்தார். ஆனால் பீமர் போல வந்த சர்ச்சையான நான்காவது பந்தை அடிக்க தவறிய அவர் 5வது பந்திலும் ரன்கள் எடுக்காமல் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார். அந்த வகையில் அவர் 65* (39) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் இலங்கையை 206/6 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: இதெல்லாம் ஈஸி கிடையாது.. தன்னுடைய உலக சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வாலை பாராட்டிய.. வாசிம் அக்ரம்

இந்த வெற்றியால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு சரித்திர வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது நபி இரண்டு விக்கெட்டுகள் எடுத்த நிலையில் இலங்கை 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

Advertisement