
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரில் ஆப்கானிஸ்தானை ஆட்டிப் பார்த்த வங்கதேசம் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட்வாஸ் செய்து கோப்பையை வென்றது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆப்கானிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றது.
அந்த நிலைமையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி அக்டோபர் 11ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக இப்ராஹிம் ஜாட்ரான் சதத்தை நழுவ விட்ட போதிலும் 95 ரன்கள் அடித்து அசத்தினார். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக கேப்டன் மெஹதி ஹசன் 3, டன்சிம் ஹசன் 2, ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 191 ரன்களை துரத்திய வங்கதேசம் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணிக்கு தன்சிட் ஹசன் 0, நஜ்முல் சாண்டோ 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
மறுபுறம் நிதானமாக விளையாடிய சாய்ப் ஹசன் 22 ரன்களில் அவுட்டானார். மிடில் ஆடரில் கேப்டன் மெஹதி ஹாசன் 4 ரன்னில் நடையைக் கட்டினார். தவ்ஹீத் ஹ்ரிடாய் நங்கூரமாக விளையாடிய போது 18 ரன்னில் ரஷீத் கான் சுழலில் கிளீன் போல்ட்டானார். இருப்பினும் அடுத்ததாக நுருள் ஹொசைன் – ஜாகிர் அலி நிதானமாக விளையாடினர்.
அதனால் 99/5 என்ற நல்ல நிலையில் இருந்த வங்கதேசம் மேற்கொண்டு 92 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது நெருப்பாக பந்தை சுழற்றிய ரஷீத் கான் 15 ரன்களில் நுருள் ஹொசைனை அவுட்டாக்கி அடுத்து வந்த தன்சிம் ஹசனை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அப்போது மறுபுறம் நிதானமாக விளையாடிய ஜாகிர் அலியும் 18 ரன்களில் அவுட்டானார்.
இதையும் படிங்க: மூன்றாம் நாள் ஆட்டத்தில் சாய் சுதர்சன் ஏன் பீல்டிங் செய்ய வரவில்லை? – பி.சி.சி.ஐ கொடுத்த விளக்கம்
இறுதியில் ரிசாத் ஹுசைன் 5, தன்வீர் 0 என டெயில் எண்டர்களை ரசித் கான் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் அனுப்பி வைத்தார். அதனால் 28.3 ஓவரில் வங்கதேசத்தை 109 ரன்களுக்கு சுருட்டி வீசிய ஆப்கானிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை முன்னதாகவே வென்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு வங்கதேசத்தை பழி தீர்த்தது. வங்கதேசத்தை 99/5லிருந்து 109க்கு ஆல் அவுட்டாக்கிய ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரசித் கான் ஆட்டநாயகன் விருது வென்றார்.