ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாற்றமாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்த வருடம் முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வென்ற சென்னை அதன் பின் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர் தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் ருதுராஜ் காயத்தால் விலகியதைத் தொடர்ந்து தோனி தலைமையில் லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கே போராடி வென்றது.
அதனால் தொடர்ந்து அசத்தும் என்று நம்பப்பட்ட சென்னை மீண்டும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. மொத்தத்தில் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. அதனால் 2020, 2022, 2024க்குப்பின் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேற சென்னை அணி தயாராக உள்ளது.
சாம்பியன் தோனி:
அதே போல 43 வயதாகும் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. அதே சமயம் பாதாளத்தில் தவிக்கும் சிஎஸ்கே அணியை தோனி அப்படியே விட்டு விட்டு செல்வதற்கும் வாய்ப்பு குறைவாகும். எனவே அடுத்த வருடம் மீண்டும் வந்து சரியான அணியை உருவாக்கி ருதுராஜ் தலைமையில் கோப்பையை வென்று தோனி வெற்றிகரமாக விடை பெறுவதற்கும் பிரகாச வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சாம்பியன் பிளேயரான தோனி யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஜாம்பவான் ஆடம் கில்க்ரிஸ்ட் தெரிவித்துள்ளார். எனவே இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு பெறுவதே சரியான முடிவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
ஜாம்பவான் அட்வைஸ்:
“எம்எஸ் தோனி மிகவும் பெரியவர். இந்த விளையாட்டில் அவர் இனியும் யாருக்காகவும் நிரூபிப்பதற்கு எதுவுமே இல்லை. கிரிக்கெட்டில் இருக்கும் அனைத்தையுமே தோனி சாதித்துள்ளார். இங்கிருந்து என்ன செய்ய விரும்புகிறோம் என்பது தோனிக்கு தெரியும். ஆனால் வருங்காலத்தை பொறுத்த வரை தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது எனக்குத் தெரியும்”
இதையும் படிங்க: தல தோனியிடம் பேட்டை அன்பு பரிசாக வாங்கிய சஹால்.. கலாய்த்த மேக்ஸ்வெல்.. காரணம் என்ன?
“ஐ லவ் யூ எம்எஸ். நீங்கள் ஒரு சாம்பியன். நட்சத்திரம்” என்று கூறியுள்ளார். முன்னதாக இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லத் தவறினால் அடுத்த வருடம் வலுவாக கம்பேக் கொடுப்போம் என்று தோனி தெரிவித்துள்ளார். அதன் காரணமாக அடுத்த வருடம் அவர் விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.



