
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே ஒன்றாம் தேதி ஜெய்ப்பூரில் 50வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தானை 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்து அசத்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை ரியன் ரிக்கல்டன் 61, ரோஹித் சர்மா 53, சூரியகுமார் யாதவ் 48*, கேப்டன் பாண்டியா 48* ரன்கள் எடுத்த உதவியுடன் 218 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய ராஜஸ்தானை அபாரமாக பவுலிங் செய்த மும்பை 117 ரன்களுக்கு சுருட்டி வீசி தங்களுடைய 7வது வெற்றியைப் பெற்றது. அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக கரன் சர்மா 3, ட்ரெண்ட் போல்ட் 3, ஜஸ்ப்ரித் பும்ரா விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையும் சேர்த்து 14 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சந்தித்த காயத்தால் 2026 ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதனால் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த மும்பை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தடுமாறியது. ஆனால் அப்போது கம்பேக் கொடுத்த பும்ரா இதுவரை 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை 6.96 என்ற எக்கனாமியில் எடுத்து மும்பை தொடர்ந்து 6 வெற்றிகளைப் பெற முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில் பந்து வீச்சின் டான் ப்ராட்மேன் ஜஸ்ப்ரித் பும்ரா ஆஸ்திரேலியர்களை பயமுறுத்தியதை கடந்த டெஸ்ட் தொடரில் அருகில் பார்த்ததாக ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா ஆல் டைம் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கலாம்”
“பும்ரா பல்வேறு சூழ்நிலைகளில் தன்னுடைய திறனை செயல்படுவது பற்றி நீங்கள் அலசி ஆராயுங்கள். அதே போன்ற வகைப்பாட்டில் சர் டான் பிராட்மேன் செயல்பாடுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் அலசினால் அது முன்னிலையில் இருக்கும். அதே போல ஜஸ்ப்ரித் பும்ராவும் அனைத்து விதமான வேரியசன், சூழ்நிலைகள், பிட்ச்களில் அசத்தக்கூடிய வகைப்பாட்டைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: 2019லயே அந்த பாடம் கத்துக்கிட்டேன்.. 500 ரன்ஸ் அடிக்காமையே 5 கோப்பை ஜெய்ச்சுருக்கோம்.. ரோஹித் பதிலடி
“சொல்லப்போனால் அவர் தற்சமயத்தில் தன்னைச் சுற்றி இருக்கும் மற்ற வீரர்களை காட்டிலும் முன்னிலையில் இருக்கிறார். அது நாம் ஒரு உண்மையான மகத்துவமான வீரரை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்கிறது. இந்தியாவில் இருந்து வந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர் கடந்த ஆஸ்திரேலிய கோடைகாலத்தில் அசத்தினார். பும்ராவை போல ஆஸ்திரேலியர்கள் ஒருபோதும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பயப்பட்டதோ அல்லது மிரண்டதோ இல்லை” என்று கூறினார்.