
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்த ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 400 ரன்களுக்கு மேல் குவித்திருந்தார்.
இதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த அவர் டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் முக்கிய பங்காற்றினார். அதற்கடுத்து இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடிய ரிஷப் பண்ட் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலும் திரும்பி உள்ளார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் ரிஷப் பண்ட் தற்போது முன்பை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 39 ரன்கள் எடுத்து அசத்திய பண்ட் தற்போது இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வில் இருந்த அவர் மீண்டும் வந்து எப்படி பேட்டிங் செய்யப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தனது பழைய ஸ்டைலிலேயே அதிரடியான ஆட்டத்தை ரிஷப் பண்ட் தொடர்ந்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு முன்பை விட தற்போது விக்கெட் கீப்பிங்கிலும் அவர் மெருகேறியுள்ளதால் அசைக்க முடியாத இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். தற்போதைய உலக கிரிக்கெட் விக்கெட் கீப்பர்களில் அதிரடியான பேட்ஸ்மேனாக திகழ்ந்துவரும் ரிஷப் பண்ட் ஒரு சிறந்த பவர் ஹிட்டராக இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
ரிஷப் பண்ட் என்னைவிட கொஞ்சம் அதிரடியான ஆட்டத்தை விளையாடுகிறார் என்று நினைக்கிறேன். அவருடைய ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. நான் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்து பழக்கப்பட்டவன். ஆனால் ரிஷப் பண்ட் அச்சமே இல்லாமல் மிக அதிரடியாக விளையாடுகிறார். அவரிடம் எனக்கு பிடித்த விடயம் என்னவென்றால் அழுத்தமான வேளையில் கூட அதிரடியாக விளையாடி அதை எடுத்து விடுகிறார். உண்மையிலேயே பண்ட் விளையாடுவதை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.
இதையும் படிங்க : இஷான் கிஷன் சதமடித்து இருந்தாலும் சஞ்சு சாம்சனுக்கு தான் அந்த வாய்ப்பு போகுமாம் – வெளியான தகவல்
என்னை பொறுத்தவரை நானும் ரிஷப் பண்ட் விளையாடும் விதத்தை பார்க்க பணம் கொடுத்து கூட டிக்கெட் வாங்குவேன். அந்த அளவிற்கு அவருடைய ஆட்டம் என்னை கவர்ந்துள்ளது. இவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கி பிழைத்து வந்துள்ளார். மிகவும் வேடிக்கையான ஒரு நல்ல வீரர் அவருக்கு எவ்வாறு கிரிக்கெட் போட்டிகளில் முன்னேறி சிறந்த முடிவுகளை பெற முடியும் என்பது தெரியும் என ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.