ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 3ஆம் தேதி 52வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னையை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு 8வது வெற்றியைப் பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை அதிகரித்துள்ளது. மறுபுறம் போராடி தோற்ற சென்னை 9வது தோல்வியை சந்தித்து தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது.
அப்போட்டியில் பெங்களூரு நிர்ணயித்த 214 ரன்கள் இலக்கை துரத்திய சென்னைக்கு ஆயுஸ் மாத்ரே 94, ரவீந்திர ஜடேஜா 77* ரன்களை அடித்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடினார்கள். இருப்பினும் தேவால்ட் ப்ரேவிஸ் 0, தோனி 12, துபே 8* என அடுத்து வந்த வீரர்களால் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடியாதது தோல்விக்கு காரணமானது.
மூளை சரியா இருக்கா:
அதற்கு முன்பாக 19வது ஓவரில் கலீல் அகமதுக்கு எதிராக ரொமாரியா செபார்டு 33 ரன்கள் வெளுத்து வாங்கியது தோல்விக்கு முதன்மை காரணமானது. இந்நிலையில் அந்த ஓவரை கலீலுக்கு பதில் அன்சுல் கம்போஜ், நூர் அஹ்மத் போன்றவர்களுக்கு தோனி கொடுத்திருக்க வேண்டும் என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ஆனால் வயது காரணமாக மூளை சரியாக இல்லாதது போல தோனி அதை செய்யத் தவறி விட்டாரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அப்போட்டியில் யாஷ் தயாளுக்கு எதிராக அவுட்டான பந்தை இளம் தோனியாக இருந்தால் ஹெலிகாப்டர் சிக்ஸராக அடித்திருப்பார் என்று ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார். இது பற்றி முதலில் கில்கிரிஸ்ட் பேசியது பின்வருமாறு. “இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்குமா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் கடைசி நேரத்தில் கலீலை வைத்து பவுலிங் செய்வது மிகவும் ரிஸ்க்கானது”
கில்கிறிஸ்ட் அதிருப்தி:
“ஏனெனில் முதல் 2 ஓவரில் அவர் 32 ரன்கள் கொடுத்தார். அதனால் நீங்கள் கம்போஜ் அல்லது ஜடேஜா, நூர் அஹ்மத் ஆகியோரை வைத்து ஃபினிஷிங் செய்திருக்க வேண்டும். தோனி ஒரு போதும் பதற்றமாக அல்லது வருத்தமாக இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டுவதில்லை. இப்போதும் அந்த ஆற்றல் அவருக்குள் இருக்கிறதா? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தனது கேரியரின் இறுதிக்கட்டத்தில் இருப்பது போல அவருடைய மூளை இப்போதும் துல்லியமாக துடிக்கிறதா?”
இதையும் படிங்க: 8 முறை 500.. தவான், வார்னரை முந்திய கிங் கோலி.. சிஎஸ்கே’வை வெளுப்பதில் 3 வரலாற்று ஐபிஎல் சாதனை
“அதே சமயம் தோனியின் கேப்டன்ஷிப்பை எப்போதும் நான் கடுமையாக விமர்சிக்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் மோசமான பந்து வீச்சால் சாய்க்கப்பட்டுள்ளார். அதே போல பேட்டிங்கில் தோனி ஃபுல் டாஸ் பந்தை தவற விட்டுள்ளார். பொதுவாக அதை தோனி தவற விடாமல் அடித்து நொறுக்கி விடுவார். இதுவே அவர் தனது கேரியரில் எங்கே இருக்கிறார்? என்பதைக் காட்டுகிறது” எனக் கூறினார். அதற்கு “பொதுவாக அது ஹெலிகாப்டர் ஷாட்டாக பறந்திருக்கும்” என்று பொல்லாக் கூறினார்.



