நாடுகடந்த ஐபிஎல் வளர்ச்சி உலக கிரிக்கெட்டுக்கு ஆபத்தானது – ஆஸி ஜாம்பவான் கவலை, நடந்தது இதோ

IPL
- Advertisement -

ரசிகர்களை கவர்வதற்காக கடந்த 2005இல் துவங்கப்பட்ட டி20 போட்டிகள் அதுவரை நடைபெற்று வந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை பின்னுக்கு தள்ளி ரசிகர்களின் அபிமான போட்டிகளாக உருவெடுத்தது. அதை பார்த்து கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு பல பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக உருவெடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று திரில் விருந்து படைப்பதுடன் ஆயிரக்கணக்கான கோடிகளை பணமாக கொட்டிக் கொடுக்கிறது. அதனால் உலகக் கோப்பையை நடத்தும் ஐசிசியை விட தரத்திலும் பணத்திலும் பன்மடங்கு உயர்ந்துள்ள ஐபிஎல் இன்று உலக கிரிக்கெட்டின் தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது.

ஏனெனில் ஏற்கனவே 74 போட்டிகளாக விரிவடைந்துள்ள ஐபிஎல் வரும் 2025 முதல் 94 போட்டிகள் கொண்ட தொடராக மேலும் விரிவடைய உள்ளது. இதனால் பணமும் தரமும் அதிகரித்தாலும் சர்வதேச போட்டிகள் பாதிப்படையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரை போலவே அதில் விளையாடும் அணி உரிமையாளர்களும் கடந்த 15 வருடங்களில் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்துள்ளனர். இதனால் இந்திய அளவில் மிகப் பெரிய பணக்காரர்களாக உருவெடுத்துள்ள அவர்கள் அதை மேலும் அதிகரிக்க வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் ஐபிஎல் அணிகளை வாங்கியுள்ளார்கள்.

- Advertisement -

நாடுகடந்த வளர்ச்சி:
அதில் முதலாவதாக வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா அணி நிர்வாகமும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணி நிர்வாகமும் ராஜஸ்தான் அணி நிர்வாகமும் தங்களது கிளை அணிகளை வாங்கின. அத்துடன் துபாயில் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு டி20 தொடரிலும் கொல்கத்தா, மும்பை, டெல்லி அணி நிர்வாகங்கள் புதிதாக அணிகளை வாங்கியுள்ளன.

CSK Johannasburg CSA T20

அதைப் பார்த்த எஞ்சிய நிர்வாகங்களும் வரும் 2023 ஜனவரியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் புதிதாக நடத்தும் டி20 சேலஞ்ச் தொடரில் பங்கேற்கும் 6 அணிகளையும் மொத்தமாக வளைத்துப்போட்டு வாங்கியுள்ளது. மேலும் அந்த தொடருக்காக வரும் ஜனவரியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கவிருந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க வாரியம் ரத்து செய்துள்ளது. இதிலிருந்து ஐபிஎல் என்பது இந்திய எல்லையையும் தாண்டி நாடு கடந்து விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. இதில் சாதகத்துக்கு சமமான பாதகமான அம்சங்களும் காணப்படுகின்றன.

- Advertisement -

கில்கிறிஸ்ட் கவலை:
இந்த இந்நிலையில் வரும் 2023 ஜனவரி மாதத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் துபாய் ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் புதிதாக உருவாக்கியுள்ள தங்களது டி20 தொடர்களை முதல் முறையாக நடத்துகின்றன. அதே சமயம் கடந்த பல வருடங்களாக ஆஸ்திரேலியா நடத்திவரும் பிக்பேஷ் தொடரும் நடைபெற உள்ளது. ஆனால் பிக்பேஷ் தொடரில் பங்கேற்காமல் துபாயில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் கிளை அணியில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களின் அதிருப்தியடைய வைத்துள்ளது.

David Warner

குறிப்பாக தங்களது நாட்டு தொடரில் விளையாடாமல் ஐபிஎல் தொடரின் கிளை அணிக்காக விளையாட வார்னர் முன்னுரிமை கொடுப்பதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் புறக்கணிப்பது சரியானதல்ல என்று தெரிவிக்கும் அவர் இதற்கு காரணமாக திகழும் நாடு கடந்த ஐபிஎல் தொடரின் அபரித வளர்ச்சி உலக கிரிக்கெட்டுக்கு ஆபத்தாக மாறியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் (ஆஸ்திரேலிய வாரியம்) பிக்பேஷ் தொடரில் டேவிட் வார்னர் விளையாட வேண்டுமென கட்டாயப்படுத்த முடியாது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர் போனால் ஒரு டேவிட் வார்னர் கிடையாது என்பதால் அந்த இடத்தில் வேறு வீரர்கள் விளையாடுவார்கள். இது கரிபியன் பிரீமியர் லீக் உட்பட ஐபிஎல் உரிமையாளர்கள் உருவாக்கிய அணிகளின் உலகளாவிய ஆதிக்கத்தின் ஒரு பகுதியாகும்”

Gilchrist

“அந்த உரிமை வீரர்களின் உரிமையையும் அவர்களின் திறமையையும் இங்கே விளையாட வேண்டும் அங்கே விளையாடக் கூடாது என கட்டளையிடும் வகையில் இறுக்கத்தை ஏற்படுத்துவதால் இது கொஞ்சம் ஆபத்தானதாக உருவாகி வருகிறது. ஒருவேளை “என்னை மன்னித்து விடுங்கள் ஆஸ்திரேலியா, நான் இந்திய அணி நிர்வாகத்துக்கு விளையாடப் போகிறேன்” என்று டேவிட் வார்னர் முடிவெடுத்தால் நீங்கள் அதைக் கேள்வி கேட்க முடியாது.

இதையும் படிங்க : ரோஹித்துக்கு பின் அவர்தான் சரியான டெஸ்ட் கேப்டன். அதுதான் சரியாக இருக்கும்- இந்திய வீரர் கருத்து

ஏனெனில் அவர் உருவாக்கி வைத்துள்ள மார்க்கெட் மதிப்பை தேர்வு செய்துள்ளார். ஆனால் இதையே பார்த்து நாளை இளம் வீரர்கள் வந்தால் அதுதான் மிகப்பெரிய சவாலாக மாறும்” என்று கூறினார்.

Advertisement