280 டூ 16.67 ஸ்ட்ரைக் ரேட்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணமான ரச்சின்.. முரளி விஜய் முந்தி 13 வருட மோசமான சாதனை

Rachin Ravindra 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக பிரிதிவி ஷா 43, டேவிட் வார்னர் 52, கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்கள் எடுத்தனர்.

சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். ஆனால் அதைத் தொடர்ந்து சேசிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்திரா 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல மிடில் ஆர்டரில் சமீர் ரிஸ்வி கோல்டன் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் ரகானே 45, டேரில் மிட்சேல் 34, சிவம் துபே 18, ஜடேஜா 21*, தோனி 37* ரன்கள் அடித்து போராடியும் சென்னை அணியால் முதல் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

மோசமான சாதனை:
மறுபுறம் முதல் வெற்றி பெற்ற டெல்லி சார்பில் அதிகபட்சமாக கலில் அகமது 2, முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இந்த வருடம் காயமடைந்த டேவோன் கான்வேவுக்கு பதிலாக இளம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சென்னை அணிக்காக அறிமுகமானார். அதில் முதல் 2 போட்டிகளில் 280, 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்த அவர் சென்னை அடுத்தடுத்து வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

ஆனால் இப்போட்டியில் அதற்கு அப்படியே நேர்மாறாக ஸ்விங்கான பந்துகளை அதிரடியாக எதிர்கொள்ள முடியாமல் திணறிய அவர் மொத்தம் 12 பந்துகள் எதிர்கொண்டு வெறும் 2 ரன்களில் அவுட்டானார். அதனால் ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை சந்தித்த சென்னை கடைசி வரை அதிலிருந்து மீள முடியாமல் முதல் தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

ஒருவேளை அவர் 12க்கு 12 ரன்கள் எடுத்திருந்தால் கூட கடைசி நேரத்தில் அதிரடியாக 37* (16) ரன்கள் அடித்த தோனியின் போராட்டம் சென்னையின் வெற்றிக்கு கை கொடுத்திருக்கலாம். இருப்பினும் இளம் வீரராக முதல் தவறை செய்த அவர் இப்போட்டியில் 2 (12) ரன்களை 16.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் 10 பந்துகளை எதிர்கொண்ட ஒரு இன்னிங்ஸில் மிகவும் குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் அடித்த சிஎஸ்கே வீரர் என்ற மோசமான சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 42 வயதில் எதிரணிக்கு பயத்தை காட்டும் தல தோனி.. ரிஸ்வான், டிகே’வுக்கு முன்பாகவே 2 வரலாற்று சாதனை

இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முரளி விஜய் 14 பந்துகளில் 21.42 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 3 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மொத்தத்தில் இப்போட்டியில் சந்தித்த தோல்வியால் புள்ளிப்பட்டியலில் இருந்து முதல் இடத்தை சென்னை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement