இந்திய அணியின் இளம் இடதுகை துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா கடந்த 2024-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 17 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 2 அரைசதம் என 535 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக 193.8 என்கிற பிரம்மாண்டமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வரும் அவர் இந்திய அணிக்காக அதிரடியான துவக்கத்தையும் அளித்து வருகிறார்.
ஷிகர் தவானின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அபிஷேக் ஷர்மா :
இதன் காரணமாக 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அவர் சுப்மன் கில்லுடன் இணைந்து துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் அவரே துவக்க வீரராக விளையாட இருக்கும் வேளையில் எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது அவருக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கும் அவர் முன்னாள் இந்திய வீரரான ஷிகர் தவானின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அபிஷேக் சர்மா நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இடதுகை இந்திய வீரராக முன்னாள் வீரரான ஷிகர் தவான் முதலிடத்தில் உள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஷிகர் தவான் விளையாடிய 18 டி20 ஆட்டங்களில் 25 சிக்சர்களை விளாசி ஒரே ஆண்டில் அதிக சித்தர்களை அடித்த இடதுகை இந்திய வீரராக முதலிடத்தில் இருக்கிறார். இந்நிலையில் அவரை கடந்து அபிஷேக் ஷர்மா புதிய சாதனையை நிகழ்த்த உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் :
இந்த 2025-ஆம் ஆண்டு இதுவரை 5 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும் 22 சிக்ஸர்களை அடித்துள்ளார். மேலும் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் அவர் 4 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை அடித்த இடதுகை இந்திய வீரராக முதலிடத்தை பிடிப்பார்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் இப்படி விளையாடுன எந்தவொரு மேட்ச்லயும் இந்திய அணி தோற்றது இல்லையாம் – வெளியான தகவல்
இந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா கிட்டத்தட்ட ஏழு ஆட்டங்களில் விளையாட வாய்ப்புள்ளதால் முதல் இரண்டு போட்டிகளிலேயே அந்த சாதனையை அவர் நிகழ்த்தினால் ஆச்சரியம் ஏதுமில்லை. கடந்த 2024-ஆம் ஆண்டு 19 சிக்ஸர்களை விளாசியிருந்த அவர் இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஃபார்மில் வெளுத்து வாங்கி வருவது இந்திய அணிக்கும் கூடுதல் பலம் என்பது குறிப்பிடத்தக்கது.



