
கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வினை அறிவித்தார். அதன்பிறகு ரோகித் சர்மாவின் இடத்தில் விளையாடி வரும் அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருவதோடு தற்போதைய டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.
அதோடு எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதன்மை துவக்க வீரராகவும் விளையாட இருக்கிறார். அதற்கு முன்னதாக தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக 34 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 சதம் மற்றும் 7 அரைசதம் என கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1199 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த அதிரடியான துவக்க வீரராக மாறியிருக்கும் இவர் ரோகித் சர்மாவின் வழியில் தான் தற்போது டி20 போட்டிகளை அணுகி விளையாடி வருகிறேன் என்றும் அவருடைய ரோலை அப்படியே நான் தொடர விரும்புவதாகவும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மா இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளார்.
எப்போதுமே பவர்பிளே ஓவர்களின் போது அதிரடியாக ஆடும்போது ஒரு அழுத்தம் இருக்கும். அப்படி ஒரு அழுத்தத்தை சமாளித்து ரோகித் சர்மா சிறப்பாக விளையாடியிருந்தார். நான் அணிக்குள் வந்தபோது என்னுடைய கேப்டனும், பயிற்சியாளரும் ரோஹித் சர்மா எவ்வாறு ஆடினாரோ அதேபோன்று ஆட கேட்டுக்கொண்டார்கள். எனக்கும் அந்த ரோல் மிகவும் பிடித்திருந்தது.
இதையும் படிங்க : எதுக்காக பும்ராவுக்கு இந்த ஓய்வு? இதெல்லாம் தேவையில்லாத ஒன்னு – முகமது கைப் கருத்து
ஏனெனில் போட்டியின் ஆரம்பத்திலேயே பந்துகளை அடித்து விளையாடுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான். அந்த வகையில் ரோகித் சர்மாவின் பாதையை பின்பற்றி நான் இந்திய அணிக்காக தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறேன். இனியும் அந்த அதிரடி தொடரும் என அபிஷேக் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.