
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 24ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. அதில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 168/6 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 75, ஹர்திக் பாண்டியா 38, சுப்மன் கில் 29 ரன்கள் எடுத்தார்கள். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிசாத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அடுத்து விளையாடிய வங்கதேசத்தை 19.3 ஓவரில் 127 ரன்களுக்கு சுருட்டி வீசிய இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சாய்ஃப் ஹசன் 69 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இந்தியாவின் இந்த வெற்றிக்கு 202 ஸ்ட்ரைக் ரைட்டில் 75 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் கடந்தப் போட்டிகளில் பாகிஸ்தானின் சாகின் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் முதல் பந்திலேயே தம்மை அவுட்டாக்க நினைத்ததாகவும் அபிஷேக் தெரிவித்துள்ளார். ஆனால் தம்முடைய இடத்தில் பந்து இருந்தால் அதை சிக்ஸராக அடிக்க தயங்க மாட்டேன் என்று அபிஷேக் தெரிவித்துள்ளார்.
வலைப்பயிற்சியில் அவுட்டாகாமல் இருந்தால் களத்தில் அதிரடியாக விளையாட முடியும் என்று தெரிவிக்கும் அபிஷேக் சர்மா ஃபீல்ட் செட்டிங்கிற்கு தகுந்தார் போல் விளையாடுவதாகவும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அணிக்காக வேலையை செய்துள்ளேன். நான் போகிற போக்கில் விளையாடுகிறேன் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளேன். பந்து என்னுடைய வரம்புக்குள் இருக்கும் போது முதல் பந்தாக இருந்தாலும் நான் அடிக்கச் செல்வேன்”
“பவர்பிளேவை எனது அணிக்காக பயன்படுத்த விரும்புவேன். சில போட்டிகளில் நான் முதல் பந்திலேயே அடிக்க விரும்பினேன். ஏனெனில் குறிப்பிட்ட பவுலர்கள் முதல் பந்தியிலேயே விக்கெட்டை எடுக்க விரும்பினார்கள். ஆனால் இது புத்துணர்ச்சியான பிட்ச் என்பதால் சில பந்துகளை பார்த்து விளையாட விரும்பினேன். ஏனெனில் பந்து ஸ்விங் மற்றும் வேகமானது”
இதையும் படிங்க: சிவம் துபேவை 3இல் களமிறக்க இதான் காரணம்.. இல்லனா 185 அடிச்சுருப்போம்.. கேப்டன் சூரியகுமார் பேட்டி
“அதனால் கில்லும் நானும் பந்தைப் பார்த்து பின்னர் அடிக்கச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். நான் எப்போதும் ஃபீல்டை பார்த்து அதற்குத் தகுந்தார் போல் விளையாடி என்னுடைய ஷாட்டுகளை அடிக்க விரும்புகிறேன். அதற்காக வலைப்பயிற்சியில் நான் நிறைய பயிற்சிகளை எடுக்கிறேன். அங்கே தான் பேட்ஸ்மேன்கள் நிறைய பந்துகளை எதிர்கொள்வதற்கான நேரம் கிடைக்கும். அங்கே நிறைய ஷாட்டுகளை அடிக்க முயற்சிக்கும் போது நீங்கள் அவுட்டாவீர்கள். ஆனால் நான் வலைப்பயிற்சியில் அவுட்டாகாமல் இருக்க பயிற்சி எடுக்கிறேன்” என்று கூறினார்.