பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் போர் சுற்று ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்களது வெற்றி நடையை தொடர்ந்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ஷாஹீன் அப்ரிடியை வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரர் ஃபர்கான் 58 ரன்களையும், சயிம் அயூப் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 21 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் அணியை பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களையும், சுப்மன் கில் 47 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா சில முக்கியமான சாதனைகளை நிகழ்த்தியிருந்த வேளையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் சர்வதேச வீரராகவும் டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் : 25 வயதான ஷாஹீன் அப்ரிடி கடந்த 2018-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமாகி தற்போது வரை 89 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 70 முறை அவர் டி20 போட்டியின் முதல் ஓவரை வீசியிருக்கிறார்.
இதையும் படிங்க : தனது குருவான யுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா – அடுத்த யுவின்னு சொன்னா தப்பே இல்ல
அப்படி 70 போட்டிகளில் முதல் ஓவரினை வீசிய அவருக்கு எதிராக எந்தவொரு பேட்ஸ்மேனும் முதல் பந்தில் சிக்சர் அடித்தது கிடையாது. ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் ஷாஹீன் அப்ரிடி வீசிய போட்டியின் முதல் பந்திலேயே சிக்சரை விளாசி அவருக்கு எதிராக டி20 போட்டிகளில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த வீரர் என்று சாதனையை அபிஷேக் சர்மா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



