
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்தடுத்த வெற்றிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அப்போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாக விளையாடி 128 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தனர்.
அதைத் துரத்திய இந்திய அணிக்கு உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக திகழும் அபிஷேக் ஷர்மா அதிரடியாக 31 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். குறிப்பாக பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ஷாஹின் அப்ரிடிக்கு எதிராக முதல் 2 பந்துகளில் அவர் பவுண்டரி, சிக்ஸரை பறக்க விட்டார். அதை சில பாகிஸ்தான் ரசிகர்களே சமூக வலைதளங்களில் பாராட்டினர்.
இந்நிலையில் 16 வயதிலேயே 150 கிலோமீட்டர் வேகப் பந்துகளை எதிர்கொள்ளும் பயிற்சியை அபிஷேக் சர்மாவுக்கு கொடுத்துள்ளதாக அவருடைய தந்தை ராஜ்குமார் தெரிவித்துள்ளார். எனவே அப்ரிடி போன்ற மித வேக பவுலர்களை அபிஷேக் எளிதாக எதிர்கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் தம்முடைய மகன் பற்றி அவர் பெருமையுடன் பேசியது பின்வருமாறு.
“அபிஷேக் ஷர்மாவை அண்டர்-19 காலங்களிலேயே 150 கி.மீ பந்துகளை எதிர்கொண்டு பயிற்சிகளை எடுக்க வைத்தேன். உங்கள் பையன் காயமடைவான் என்று அனைத்து சிறுவர்களும் சொல்லும் அளவுக்கு அபிஷேக்கை நான் பயிற்சி எடுக்க வைத்தேன். அவரிடம் உன்னால் இந்த பந்துகளை எதிர்கொள்ள முடியுமா? என்றும் கேட்டேன்”
“அதற்கு “அப்பா வேண்டுமானால் பவுலரை இன்னும் வேகமாக கூட வீசச் சொல்லுங்கள், நான் விளையாடுகிறேன்” என்று அபிஷேக் சொல்வார். அபிஷேக்கை நான் பயிற்சிக்காக மைதானத்துக்கு அழைத்து செல்லும் போது “உங்களுடையப் பையன் நிறைய திறமையைக் கொண்டுள்ளதால் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடுவார்” என்று அங்குள்ள பெரும்பாலான சீனியர் வீரர்கள் சொல்வார்கள்”
இதையும் படிங்க: சூரியகுமார் மொத்த ரிப்போர்ட் கொடுத்தாரு.. ஆனா பாகிஸ்தான் ஐன்ஸ்டீன் செஞ்சதை பாருங்க.. அக்தர் வேதனை
“அவர்களுடைய ஆசிர்வாதங்கள் மற்றும் அன்பு தான் அபிஷேக்கை இங்கே கொண்டு வந்துள்ளது. இன்னும் வரும் காலங்களில் அபிஷேக் இந்தியாவுக்காக நிறையப் போட்டிகளை வென்று கொடுப்பார் என்று நான் சொல்வேன். அது பேட்டிங்கில் மட்டுமல்ல பந்து வீச்சிலும் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார். இதற்கிடையே அபிஷேக் ஷர்மா பந்து வீச்சிலும் தம்முடைய திறமையை மெருகேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.