
இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அந்தத் தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை உலக டி20 சாம்பியன் என்பதை நிரூபித்தது. குறிப்பாக மும்பையில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இங்கிலாந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா தங்களது 2வது பெரிய வெற்றியை பதிவு செய்தது.
அந்த வெற்றிக்கு 7 பவுண்டரி 13 சிக்சர்களைப் பறக்க விட்டு 2 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரண்டராக அசத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் விவ் ரிச்சர்ட்ஸ், விரேந்தர் சேவாக், டிராவிஸ் ஹெட் ஆகியோர் வரிசையில் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் டாப் 3 இடங்களில் இந்தியாவுக்காக பேட்டிங் செய்யும் காலத்தை தாம் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் ஹர்பஜன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களாக இருக்கும் காலத்திற்காக நான் ஆவலுடன் உள்ளேன். அவர்கள் மூவரும் டாப் ஆர்டரில் விளையாடும் காலம் வெகு தொலைவில் இல்லை”
“ஒருவேளை அடுத்த 6 மாதங்களில் அந்த மூவரும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடுவதை நாம் பார்க்க முடியும். அபிஷேக் ஷர்மாவை நாம் டெஸ்ட் அணியிலும் பார்க்க முடியும். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர். ரஞ்சிக் கோப்பையில் அவர் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கிறார்”
“தன்னுடைய நாளில் அவர் போட்டியை எதிரணியிடமிருந்து பறிக்கக் கூடியவர். டிராவிஸ் ஹெட் அதை செய்கிறார். வீரேந்திர சேவாக், விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரும் அதைச் செய்தார்கள். இவர்களைப் போன்ற வீரர்கள் போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்லக் கூடியவர்கள். எனவே அபிஷேக் ஷர்மாவுக்கு இன்று அல்லது நாளை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்”
இதையும் படிங்க: பஸ் டிரைவர் தான் அந்த திட்டத்தை கொடுத்தாரு.. ஸ்பெஷல் பரிசு கொடுத்த கோலி பற்றி ரயில்வேஸ் பவுலர் பேட்டி
“டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கி போட்டியை எதிரணியிடமிருந்து பறிக்கும் சேவாக் போன்ற வீரர் உங்களுக்கு எப்போதும் தேவை. அது அபிஷேக் சர்மாவாக இருக்கக் கூடும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஏற்கனவே ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார். அவருடன் அபிஷேக் ஷர்மாவும் சேர்ந்தால் இந்திய அணியின் டாப் ஆர்டர் மிரட்டலாக இருக்கும் என்று நம்பலாம்.