ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் 27வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி சொந்த மண்ணில் பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்களுடைய 2வது வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 246 ரன்கள் இலக்காக நிர்ணயித்ததால் நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82, பிரியான்ஸ் ஆர்யா 36, ஸ்டோய்னிஸ் 34* ரன்கள் அடித்தார்கள். ஆனால் அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் அணி சொந்த ஊரில் பஞ்சாப்பை சூறையாடி 18.3 ஓவரில் இலக்கைத் தொட்டு எளிதாக வென்றது. அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் 2வது அதிகபட்சமாக வெற்றிகரமாக சேசிங் செய்து ஹைதராபாத் சாதனையும் படைத்தது.
காய்ச்சல் தாண்டி:
அந்த அணியின் இந்த சாதனை வெற்றிக்கு துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா சரமாரியாக அடித்து நொறுக்கி 14 பவுண்டரி 10 சிக்ஸருடன் 141 (55) ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். சமீபத்திய போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடிய அவர் இப்போட்டியில் சதத்தை அடித்ததும் தனது பாக்கெட்டிலிருந்து “இது ஆரஞ்சு ஆர்மிக்காக” அதாவது “ஹைதராபாத் ரசிகர்களுக்காக” என்று காண்பித்துக் கொண்டாடினார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் உடல்நிலை சரியில்லாமல் தடுமாறிய போது இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் தம்முடைய குரு யுவராஜ் சிங் ஆதரவு கொடுத்ததாக அபிஷேக் கூறியுள்ளார். மேலும் அந்த துண்டு சீட்டில் எழுதியதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று அதை எனக்கு நானே எழுதிக் கொண்டேன். பொதுவாக காலையில் எழுந்ததும் நான் ஏதாவது மனதில் தோன்றுவதை பேப்பரில் எழுதுவேன்”
அபிஷேக் மகிழ்ச்சி:
“அந்த வகையில் இன்று ஏதாவது நான் செய்தால் அது ஆரஞ்சு ஆர்மிக்காக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதிர்ஷ்டவசமாக இன்றைய நாள் என்னுடையது என்று உணர்ந்தேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் 4 நாட்களாக நான் காய்ச்சல் காரணமாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். அப்போது யுவராஜ் சிங், சூரியகுமார் யாதவ் ஆகியோர் என்னை சுற்றி இருந்ததற்காக நன்றியுடையவனாக இருக்கிறேன்”
இதையும் படிங்க: சன் ரைசர்ஸ் அணி பெற்ற வெற்றியால் சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – புள்ளி பட்டியலில் ஏற்பட்ட பின்னடைவு
“அவர்கள் தொடர்ச்சியாக என்னை அழைத்தார்கள். ஏனெனில் என்னால் ஏதாவது செய்ய முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் தொடர்ந்து தடுமாற்றமாக விளையாடினால் எந்த வீரரும் தங்கள் மீது சந்தேகப்படுவார்கள். இருப்பினும் அவர்கள் இருவரும் என் மீது நம்பிக்கை வைத்தனர். அதனால் நான் மீண்டும் திரும்புவதற்கு ஒரு இன்னிங்ஸ் மட்டுமே தேவை என்பதை எனக்கு தெளிவாக தெரிந்தது” என்று கூறினார்.



