
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரினை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக இந்திய டி20 அணியின் மாற்று துவக்க வீரராக இடம்பிடித்த 25 வயதான இளம் வீரரான அபிஷேக் சர்மா தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கடந்தாண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 2 அரைசதம் என 596 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக போட்டியின் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடும் அவர் இதுவரை 195 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று ஓமன் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆட்டத்தில் கூட 15 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி 2 சிக்சர் என 253 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 38 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
என்னதான் அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வந்தாலும் அவரால் பெரிய ஸ்கோர்களை அடிக்க முடியவில்லை என்கிற ஒரு விமர்சனம் முன்னாள் வீரர்கள் பலர்து மத்தியிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் அபிஷேக் ஷர்மாவின் நிலைத்தன்மை குறித்து விமர்சிப்பது தவறு என்றும் அவரை தொடர்ச்சியாக இப்படியே விளையாட சுதந்திரம் வழங்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான அபினவ் முகுந்த் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : அபிஷேக் ஷர்மாவை பொறுத்தவரை பெரிய ரன்களை குவிக்க முடியவில்லை என்கிற ஒரு விமர்சனம் அவர் மீது தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் அவர் ரிஸ்க் எடுத்து விளையாடும் இந்த அதிரடியான ஆட்டம் தான் நமக்கு பல போட்டிகளை வென்று கொடுக்கப்போகிறது என்ற புரிதலுக்கு வருவீர்கள் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் டி20 போட்டிகளின் போது எப்போதுமே பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக துவங்குவது அவசியம். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி வருகிறத. அதிலும் குறிப்பாக அபிஷேக் ஷர்மா இப்படி அதிரடியாக விளையாடினால் நம்மால் பவர்பிளே ஓவர்களில் 80 முதல் 85 ரன்கள் வரை குவிக்க முடியும்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான அடுத்த போட்டியில் அக்சர் படேல் விளையாடுவது சந்தேகம் – என்ன நடந்தது?
இந்திய அணியில் தற்போது எட்டாம் வரிசை வரை பேட்டிங் ஆழம் இருக்கும் வேளையில் துவக்க வீரர் பொறுமையாக விளையாட முடியாது. அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் கொடுக்கும் அதிரடியான துவக்கம் தான் நம்மை பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் செல்லும் அதோடு பல வெற்றிகளையும் பெற்று தரும் என்றும் அபிஷேக் சர்மாவுக்கு ஆதரவாக அபினவ் முகுந்த் பேசியது குறிப்பிடத்தக்கது.