டி20 உ.கோ’யில் அந்த டீமுக்கு எதிராக 200 ரன்கள் அடிப்பது கஷ்டம் – காரணத்தை விளக்கும் அபினவ் முகுந்த்

Abhinav Mukund
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஐசிசி டி20 உலகக் கோப்பை 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியுள்ளது. டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இத்தொடரில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா, உலகின் நம்பர் ஒன் டி20 களமிறங்கும் இந்தியா, அதிரடி வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நிறைய கணிப்புகள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இத்தொடர் நடைபெறும் ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்கள் பெரிதாக இருக்கும் என்பதாலும் வேகத்துக்கு கைகொடுக்கும் என்பதாலும் தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட அணியே கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே கூறலாம்.

அந்த வகையில் இந்திய அணியை பார்க்கும்போது போட்டியின் அனைத்து நேரங்களிலும் கச்சிதமாக பந்து வீசி வெற்றியைப் பெற்றுத் தரக்கூடிய முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ள நிலையில் எஞ்சியிருக்கும் புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் 130+ கி.மீ வேகத்தில் மட்டும் வீசக்கூடியவர்கள் என்பதுடன் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 200 ரன்களை அடிப்பதே வெற்றிக்கான முதல் படி என்பார்கள்.

- Advertisement -

ஆபத்தான அணி:
அந்த கண்ணோட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற மற்ற அணிகளை காட்டிலும் தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்டுள்ளதால் இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 200 ரன்களை அடிப்பது எதிரணிகளுக்கு சவாலாக இருக்குமென முன்னாள் இந்திய வீரர் அபினவ் முகுந்த் கணித்துள்ளார். கடந்த உலக கோப்பையில் தொடமுடியாத வேகப்பந்து வீச்சால் இந்தியாவை வரலாற்றில் முதல் முறையாக சாய்த்து அரையிறுதியில் தோற்று வெளியேறிய பாகிஸ்தான் சமீபத்திய ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் தோற்றாலும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை தோற்கடித்த வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

அதன் பின் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தோற்றாலும் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த முத்தரப்பு தொடரில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்த்து கோப்பையை முத்தமிட்டு வெற்றியுடன் உலகக்கோப்பையில் களமிறங்குகிறது. அந்த முத்தரப்பு தொடரின் பைனலில் சமீபகாலங்களாக பலவீனமாக கருதப்பட்ட மிடில் ஆர்டர் பார்முக்கு திரும்பி வெற்றி பெற வைத்தது. மேலும் ஹாரிஷ் ரவூப், நசீம் ஷா ஆகியோருடன் ஷாஹீன் அப்ரிடியும் காயத்திலிருந்து திரும்புவதால் இத்தொடரில் பாகிஸ்தான் ஆபத்தான அணியாக இருக்கும் என்று தெரிவிக்கும் அபினவ் முகுந்த் தன்னுடைய கணிப்பு எந்தளவுக்கு நிஜமாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “டாப் ஆர்டர் அதிரடி காட்டாமலேயே பாகிஸ்தான் முத்தரப்பு தொடரை வென்றுள்ளது அவர்களுக்கு நல்லதா கெட்டதா? என்று என்னை யோசிக்க வைக்கிறது. ஏனெனில் இன்னும் அவர்கள் வரலாற்றில் தோல்விகளை கொடுத்த அதே பழைய ஸ்கூல் கிரிக்கெட்டை பின்பற்றுகிறார்கள். ஆனால் இன்று அது வெற்றியைக் கொடுத்துள்ளது. மேலும் அவர்களிடமுள்ள பந்து வீச்சு கூட்டணிக்கு உலக கோப்பையிலும் அது அவர்களுக்கு வேலை செய்யலாம். அதனால் அவர்களுக்கு எதிராக நிறைய அணிகள் 200 ரன்களை அடிப்பதை பார்க்க முடியாது”

“அதற்காக இதேபோல கையில் விக்கெட்டை வைத்துக்கொண்டு விளையாடுவதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தால் ஒருவேளை அந்த அணுகுமுறை வேலை செய்யாமல் போகலாம். ஆனால் 160 – 170 போன்ற இலக்குகள் அவர்களால் போராடி எட்டக் கூடியதாக இருக்கிறது. மேலும் கடந்த ஜனவரி 2021 முதல் பாபர் அசாம் 14 போட்டிகளில் 30 ரன்களை கடந்துள்ளார். அதில் அவர்கள் 10இல் வென்றுள்ளனர். முகமத் ரிஸ்வான் 43 போட்டிகளில் 29 முறை 30 ரன்களை கடந்துள்ளார். அந்த 29இல் பாகிஸ்தான் 23 முறை வென்றுள்ளது”

- Advertisement -

“எனவே அவர்கள் இருவரும் சிறப்பாக செயல்படும் போது பாகிஸ்தான் 7இல் 6 போட்டிகளை வெல்கிறது. இந்த வகையில் அவர்கள் மிகவும் ஆபத்தான அணி. ஆனால் அவர்களுடைய இந்த ஸ்டைல் இன்னும் காலாவதியாகாமல் வெற்றியை கொடுக்குமா என்பதை காலமே பதில் சொல்லும். சொல்லப்போனால் பாகிஸ்தான் என்ற ஒரு அணி மட்டுமே இம்மாதிரியான டி20 கிரிக்கெட் விளையாடி வருகிறது.

இதையும் படிங்க : டி20 உ.கோ வர்ணனையாளர்கள் பட்டியல் – ஐசிசி வெளியிட்ட சூப்பர் வீடியோவை பாராட்டும் ரசிகர்கள்

இதில் ரிஸ்க் இருந்தாலும் அவருடைய அற்புதமான பந்து வீச்சு கூட்டணியால் அவர்கள் தைரியமாக இதை விளையாடுகிறார்கள். எனவே இதை அவர்கள் மாற்றுவார்களா என்பது சந்தேகமே” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement