IND vs WI : இதெல்லாம் தோல்வியே இல்ல ஃப்ரீயா விடுங்க, ஆனா 2வது போட்டியில் அவங்க தான் காப்பாத்தணும் – அபினவ் முகுந்த் பேட்டி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் போராடி தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸை 150 ரன்கள் கட்டுப்படுத்தியும் பேட்டிங்கில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக பேட்டிங் வரிசையில் அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர் திலக் வர்மாவை தவிர்த்து இஷான் கிசான் முதல் சஞ்சு சாம்சன் வரை அனைவருமே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இதை தொடர்ந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறும் 2வது போட்டியில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று பதிலடி கொடுத்து இத்தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது.

- Advertisement -

கம்பேக் கொடுங்க:
இந்நிலையில் 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் விளையாடாத நிலைமையில் முதல் போட்டியில் பதிவு செய்த வெற்றி இந்தியாவை பெரிதளவில் பாதிக்காது என்று முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். மேலும் ட்ரினிடாட் பிட்ச் மெதுவாக இருந்ததால் அதற்கேற்றார் போல் விளையாட முயற்சித்து இளம் வீரர்கள் தோற்றதாக தெரிவிக்கும் அவர் 2வது போட்டியில் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா போன்றவர்கள் அதிரடியாக செயல்பட்டு இந்தியாவை வெற்றி பாதைக்கு திருப்புவார்கள் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் இளம் அணி விளையாடுவதால் முதல் போட்டியில் இந்தியா சந்தித்த தோல்வியை நீங்கள் அதிகமாக படிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். மேலும் பாண்டியா தலைமையில் அவர்கள் நீண்ட நாட்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுகின்றனர். அதனால் புது முகங்களும் புதிய பேட்டிங் ஆர்டர் வரிசையும் நமது அணியில் இருக்கிறது”

- Advertisement -

“குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, ஷமி போன்ற சீனியர்கள் அணியில் இல்லை. அதனால் இந்த தோல்வி கவலையை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. மேலும் அந்தப் போட்டியில் இந்தியா தங்களுடைய அணுகு முறையில் சிறப்பாகவே செயல்பட்டது. கடைசி நேரத்தில் சில தவறுகளை செய்தாலும் அந்த போட்டியில் இந்தியாவின் அணுகுமுறை சரியாக நடந்திருந்தால் வெற்றியைப் பெற்ற அணியாக இருந்திருக்கும். அத்துடன் அந்த போட்டியில் ட்ரினிடாட் கால சூழ்நிலைக்கேற்ப இந்திய பேட்டிங் செயல்பட்டதாக நான் கருதுகிறேன்”

“அங்கே பிட்ச் மிகவும் மெதுவாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினர். இந்த சூழ்நிலையில் கயானாவில் நடைபெறும் 2வது போட்டியிலும் அதே போன்ற பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதை சமாளிக்க இசான் கிசான் அல்லது திலக் வர்மா போன்றவர்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். குறிப்பாக சூரியகுமார் யாதவ் இன்னும் சில பெரிய ஷாட்களை அடித்து விளையாட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs WI : வெ.இ டி20 தொடரில் கிங் கோலி, ஹிட்மேன் ரோஹித்தை முந்தி – சூர்யகுமார் படைக்க காத்திருக்கும் ஆல் டைம் சாதனை

அவர் கூறுவது போல சோதனை முயற்சியாக நடைபெறும் இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் ஐபிஎல் 2023 தொடரில் விளையாடி நல்ல ஃபார்மில் இருப்பதுடன் கடந்த காலங்களில் இதே வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். எனவே ஒரு தோல்விக்காக பின்வாங்காமல் அடுத்து வரக்கூடிய போட்டிகளில் பயமறியாத காளையாக இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement