அதிர்ஷ்டத்துடன் மெகா போராட்டம் – 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலகசாதனை படைத்த பாக் வீரர்

Abdullah Shafiq Pak
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 16-ஆம் தேதியன்று கால்லே மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து பாகிஸ்தானின் அதிரடியான வேகப்பந்து வீச்சில் 222 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் கருணரத்னே 1, ஏஞ்சலோ மேத்யூஸ் 0, டீ சில்வ 14, குஷால் மெண்டிஸ் 21 என முக்கிய பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 76 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் இலங்கையின் அற்புதமான சுழல் பந்து வீச்சில் 218 ரன்களுக்கு சுருண்டது. அசார் அலி 3, ஷபிக் 13, முஹம்மது ரிஸ்வான் 19 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்ற கேப்டன் பாபர் அசாம் சதமடித்து 11 பவுண்டரி 2 சிக்சருடன் 119 ரன்கள் எடுத்தார். இலங்கை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக இளம் வீரர் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

பெரிய இலக்கு:
அதை தொடர்ந்து 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை இம்முறை நிதானமாகவும் பொறுப்பாகவும் பேட்டிங் செய்து 337 ரன்கள் குவித்தது. கேப்டன் கருணரத்னே 16, ரஜிதா 7, அஞ்சேலோ மேத்தியூஸ் 9, டீ சில்வா 20 என முக்கிய வீரர்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் தொடக்க வீரர் பெர்னாண்டோ 64 ரன்களும் குசல் மெண்டிஸ் 76 ரன்களும் எடுத்தனர். அவர்களுடன் 2வது இன்னிங்சிலும் அபாரமாக பேட்டிங் செய்த தினேஷ் சண்டிமல் 94* ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

இலங்கை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக நவாஸ் 5 விக்கெட்டுகளும் யாசிர் ஷா 3 விக்கெட்டும் எடுத்தனர். அதை தொடர்ந்து 342 என்ற மெகா இலக்கை பேட்டிங்க்கு சவாலான கால்லே மைதானத்தில் பாகிஸ்தான் எட்டிப் பிடிக்காது என்றே அனைவரும் நினைத்தனர். இருப்பினும் 87 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இமாம்-உல்-ஹக் 35 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த அசார் அலி மீண்டும் 6 ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

நங்கூரமாக சபிக்:
அப்போது 104/2 என்ற நிலைமையில் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் உடன் மறுபுறம் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் கைகோர்த்து 101 ரன்கள் பர்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். அதில் அரைசதம் கடந்து 55 ரன்களில் பாபர் அசாம் ஆட்டமிழக்க அடுத்து வந்த முஹம்மது ரிஸ்வான் தனது பங்கிற்கு 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் பொறுமையாக பேட்டிங் செய்த ஷபிக் சதமடித்து வெற்றியை உறுதிசெய்த நிலையில் எதிர்புறம் வந்த சல்மான் 12, ஹசன் அலி 5 ரன்களில் அவுட்டானார்கள்.

இறுதியில் கடைசிவரை அவுட்டாகாமல் 408 பந்துகளை சந்தித்து வெறும் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 160* ரன்களை 39.22 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த அப்துல்லா ஷபிக் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி பாகிஸ்தானை 344/6 ரன்களை எடுத்து வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். சுழலுக்கு சாதகமான கால்லே மைதானத்தில் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகள் எடுத்தாலும் இதர பவுலர்கள் கைகொடுக்க தவறியதால் சொந்த மண்ணில் தலை குனியும் தோல்வியை இலங்கை சந்தித்தது.

- Advertisement -

மெகா உலகசாதனை:
இந்த வெற்றியால் 1 – 0* (2) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று பாகிஸ்தான் அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றி ஆசாத் ஷபிக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். வெறும் 22 வயதிலே பேட்டிங்கில் சவாலான கால்லே மைதானத்தில் போராடும் வகையில் பேட்டிங் செய்த அவருக்கு 70, 135, 151 ஆகிய ரன்களில் இலங்கை ஃபீல்டர்கள் கோட்டைவிட்ட கேட்ச் அதிர்ஷ்டமாக கைகொடுத்தது. அதை பயன்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட இன்னிங்ஸ்சில் 500 நிமிடங்கள் பேட்டிங் செய்த முதல் பேட்ஸ்மேன் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

342 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது 524 நிமிடங்கள் அதாவது 8 மணி நேரம் 44 நிமிடங்கள் களத்தில் நின்று பேட்டிங் பொறுமையின் சிகரமாக பேட்டிங் செய்த அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். உலகில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட டெஸ்ட் போட்டிகளில் ராகுல் ட்ராவிட் உட்பட வேறு எந்த பேட்ஸ்மேனும் 500 நிமிடங்கள் கூட பேட்டிங் செய்தது கிடையாது. அந்த பட்டியல் இதோ:
1. அப்துல்லா சபிக் : 8 மணி 44 நிமிடங்கள், இலங்கைக்கு எதிராக*
2. அரவிந்த டீ சில்வா : 7 மணி 40 நிமிடங்கள், ஜிம்பாப்வேக்கு எதிராக
3. மொஹிந்தர் அமர்நாத் : 7 மணி 20 நிமிடங்கள் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக
4. யூனிஸ் கான் : 7 மணி 08 நிமிடங்கள், இலங்கைக்கு எதிராக

இதையும் படிங்க : பார்முக்கு திரும்ப கோலியை அவமானப்படுத்தும் முடிவை எடுக்கப்போகும் தேர்வுக்குழு – வெளியான தகவல் இதோ

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் இலக்கைத் துரத்தும் போது கடைசி வரை அவுட்டாகாத பாகிஸ்தான் தொடக்க வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். மேலும் கால்லே மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற பெருமையையும் பாகிஸ்தான் பெற்றது.

Advertisement