
இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட முழு அணியும் ஏற்கனவே பிசிசிஐ அறிவித்து விட்டது. இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் முதன்மை இந்திய அணியானது இந்தியாவிலிருந்து இங்கிலாந்து பயணிக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விட்டதால் சுப்மன் கில் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதன் காரணமாக இந்த தொடரானது இந்திய அணிக்கு மிகப்பெரும் சவாலான தொடராக அமையும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில் முற்றிலும் இளம்வீரர்கள் இருந்தாலும் இந்த இந்திய அணியால் இங்கிலாந்து மண்ணில் சாதிக்கவும் முடியும் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஆர்.சி.பி அணியின் வீரரும், தென்னாப்பிரிக்க கேப்டனுமான ஏ.பி. டிவில்லியர்ஸ் தற்போதுள்ள இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியால் நிச்சயம் இங்கிலாந்து மண்ணில் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதுள்ள இந்திய அணிக்கு இளம் வீரர்கள் வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. சுப்மன் கில் தனது பொறுப்பை சரியாக கையாண்டு இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்துவார் என்று நம்புகிறேன். இந்தியாவில் நிறைய இளம் வீரர்கள் திறமையுடன் இருக்கிறார்கள். இந்த ஐபிஎல் தொடரில் ஏகப்பட்ட இளைஞர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை திறமையான வீரர்களுக்கு பஞ்சம் கிடையாது. அந்த வகையில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அனைவருமே சிறப்பான வீரர்கள் தான். என்னை பொறுத்தவரை இந்த இளம் வீரர்களால் நிச்சயம் இங்கிலாந்து மண்ணில் சாதிக்க முடியும்.
இதையும் படிங்க : கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிய போது தான் எனக்கு அந்த ஹெல்ப் கெடச்சது – சாய் சுதர்சன் பேட்டி
அதிலும் குறிப்பாக இங்கிலாந்தை அதன் மண்ணில் வீழ்த்தும் அளவிற்கு தற்போதுள்ள அணி பலமான அணியாகவே உள்ளது என்று நினைக்கிறேன். ஏனெனில் பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்தக்கூடிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். அதனால் இவர்களால் இங்கிலாந்து மண்ணில் சாதிக்க முடியும் என டிவில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.