பைனலில் அந்த 2 அணிகளும் விளையாடி கோப்பையை அவங்க தான் வெல்வாங்க – காரணத்துடன் ஏபி டீ கணித்து பேசியது இதோ

ABD
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியா கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திருப்பங்களை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஆரம்பத்திலேயே வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றுடன் வெளியேறிய நிலையில் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானை ஜிம்பாப்வேவும் இங்கிலாந்தை அயர்லாந்தும் தோற்கடித்தது போன்ற ரசிகர்கள் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறின.

T20 World Cup Captains 2022

- Advertisement -

அதை விட கடைசி நேரத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்காமல் வெளியேறிய நிலையில் அரையிறுதி வாய்ப்பை கையில் வைத்திருந்த தென்னாப்பிரிக்கா யாருமே எதிர்பாராத வகையில் கடைசி போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்திடம் தோற்று வெளியேறி அதிர்ச்சியை சந்தித்தது. அதனால் ஆரம்பத்திலேயே கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி 3 போட்டிகளில் வென்று அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து நடைபெறும் அரையிறுதி சுற்றில் நவம்பர் 9ஆம் தேதி நியூசிலாந்தை பாகிஸ்தானும் நவம்பர் 10ஆம் தேதி இந்தியாவை இங்கிலாந்தும் எதிர்கொள்கின்றன. அதில் சிறப்பாக செயல்பட்டு பைனலுக்கு சென்று கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 2007 போல 15 வருடங்கள் கழித்து பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் இறுதிப் போட்டியில் மோதுமா என்று எதிர்பார்ப்பு இருநாட்டைச் சேர்ந்த ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

INDvsNZ

ஏபிடியின் கணிப்பு:
ஆனால் தரத்தின் அடிப்படையில் பார்க்கும் போது தடுமாற்றமாக செயல்படும் இந்தியா – பாகிஸ்தானுக்கு வாய்ப்பில்லை ராஜா என்று தெரிவிக்கும் சில ரசிகர்கள் 2019 உலக கோப்பையை போல நியூஸிலாந்தும் இங்கிலாந்தும் பைனலுக்கு தகுதி பெறும் என்று சொல்கிறார்கள். இந்நிலையில் கோப்பையை வெல்வதற்கு 4 அணிகள் போட்டி போட்டாலும் தம்மைப் பொறுத்தவரை நியூசிலாந்தும் இந்தியாவும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று தென்னாபிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் இந்த தொடரில் இதர வீரர்களை காட்டிலும் பேட்டிங்கில் அபாரமான பார்மில் இருக்கும் விராட் கோலி மற்றும் சூரியகுமார் ஆகியோரை கொண்ட இந்தியா ஃபைனலில் கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு. “அனேகமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்று நினைக்கிறேன். அதில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன். இத்தொடரில் அனைவரும் சிறப்பாக விளையாடினாலும் சூரியகுமார் மற்றும் விராட் கோலி ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். அதே சமயம் இதுவரை சிறப்பாக செயல்படாத ரோகித் சர்மா முக்கிய நேரங்களில் அசத்தலாக செயல்படலாம். அவரும் அற்புதமான வீரர்”

ABD

“அத்துடன் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இருக்கும் அத்தனை வீரர்களும் திறமையானவர்கள். அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் சிறப்பாக செயல்படுவதை நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அந்த போட்டியில் தான் அவர்களுக்கு மிகப்பெரிய சோதனையும் காத்திருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதி போட்டியில் வென்றால் நிச்சயம் அவர்கள் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்வார்கள்” என்று கூறினார். அத்துடன் இந்த தொடரில் தம்முடைய நண்பரான விராட் கோலி அபாரமாக செயல்படுவது மகிழ்ச்சியளிப்பதாக ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

அதை விட பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவுக்கு அபாரமான வெற்றியை பெற்றுக் கொடுத்ததாகவும் மனதார பாராட்டினார். அத்துடன் இந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் இந்தியாவுக்காக தமது முழு ஆதரவு கொடுப்பதாக வெளிப்படையாக அவர் கூறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அவரது ஆதரவுடன் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வெல்லுமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement