
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டார். 2027 வரை பயிற்சியாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஒரே வருடத்துடன் விலகுவதாக ராஜஸ்தான் அணி அறிவித்துள்ளது. அந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணி ரியான் பராக்கை புதிய கேப்டனாக நியமிக்க விரும்புவதாக க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் ட்ராவிட் தொடர்ந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதை ராஜஸ்தான் அணி ஏற்றுக் கொள்ளாததால் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ததாக கிரிக்பஸ் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் அணி வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு முக்கிய மாற்றத்தைச் செய்ய விரும்புவதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவிக்காததாலேயே ராகுல் டிராவிட்டை வலுக்கட்டாயமாக ராஜஸ்தான் நிர்வாகம் அணியிலிருந்து நீக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து தன்னுடைய கருத்தை அவர் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அந்த முடிவு உரிமையாளர் அல்லது அணி நிர்வாகம் எடுத்தது போல் தெரிகிறது. அவர்கள் அவருக்கு அகன்ற வேலையைக் கொடுத்துள்ளார்கள்”
“ஆனால் டிராவிட் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் ராஜஸ்தான் அணியில் தொடர விரும்பிய அவர் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார். ஒருவேளை பதவியிலிருந்து விலகுவது அவருடைய முடிவாகவும் இருந்திருக்கலாம். நமக்கு எதுவும் தெரியாது. வருங்காலத்தில் டிராவிட் அதைப் பற்றி பேசும் போது நமக்கு உண்மைத் தெரியும். அவர் ராஜஸ்தான் அணி நிரப்புவதற்கு பெரிய இடத்தை விட்டுச் சென்றுள்ளார்”
“மிகவும் நல்ல கேரக்டரை கொண்ட அவர் கிரிக்கெட்டை பற்றி நிறைய தெரிந்தவர். இளம் வீரர்களிடம் அவரைப் பற்றி நான் நிறைய பேசியுள்ளேன். அப்போது டிராவிட் தங்களுடைய கேரியரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக பலரும் சொன்னார்கள். எனவே அவரைப் போன்றவரை நீங்கள் மிஸ் செய்வீர்கள். இது போன்ற முடிவுகளை நீங்கள் கால்பந்து பிரிமியர் லீக் தொடரில் பார்த்திருப்பீர்கள்”
“அங்கே கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் பயிற்சியாளர் மற்றும் மேனேஜர்கள் மேலே இருக்கும். ஆனால் கோப்பை வெல்லாவிட்டால் அவர்களிடம் உரிமையாளர்கள் கேள்வி எழுப்புவார்கள். அது போல ராஜஸ்தான் அணி கொடுத்த மற்றொரு வேலையை டிராவிட் ஏற்க மறுத்துள்ளார். அதனால் ராஜஸ்தான் அவரை அணியிலிருந்து தூக்கி எரிந்துள்ளார்கள்”
இதையும் படிங்க: யாரும் அதை விராட், ரோஹித்துக்கு சொல்லத் தேவையில்ல.. பும்ரா தவிர எல்லாரும் விளையாடனும்.. புஜாரா பேட்டி
“ஒருவேளை ராஜஸ்தான் அணி வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு முன்னோக்கிச் செல்ல முடிவெடுத்திருக்கலாம். அதற்காக ஜோஸ் பட்லர் போன்றவரை விடுவித்தது தவறு என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஓரிரு வீரர்களை விடலாம். ஆனால் முக்கிய வீரர்களை மொத்தமாக விடுவது வீழ்ச்சியைக் கொடுக்கும்” என்று கூறினார்.