
தென்னாபிரிக்காவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் 2022 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து அசத்தினார். அதனால் அவரை ஐபிஎல் தொடரில் வாங்கிய மும்பை அணி வாய்ப்பும் கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்படத் தவறியதால் மும்பை அணி அவரை கழற்றி விட்டது. அதனாலேயே 2025 ஐபிஎல் ஏலத்தில் மும்பை உட்பட எந்த அணிகளும் அவரை வாங்கவில்லை.
அந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணி தங்களுடைய காயமடைந்த வீரர் குர்ஜப்நீத் சிங்கிற்கு பதிலாக ப்ரேவிஸை வாங்கியது. அந்த வாய்ப்பில் அட்டகாசமாக விளையாடிய அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தினார். அத்துடன் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் 125* (56) ரன்கள் அடித்த அவர் தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்து சாதனைகளை படைத்தார்.
அப்போது ஏலத்தில் ப்ரேவிஸை வாங்கும் வாய்ப்பை ஐபிஎல் அணிகள் தவற விட்டதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்தார். ஆனால் அவரை சிஎஸ்கே அணி வாங்கியது மாஸ்டர்ஸ்ட்ரோக் என்றும் டீ வில்லியர்ஸ் பாராட்டினார். இந்நிலையில் எதிரணி பவுலர்களுக்கு பயத்தை கொடுக்கும் வகையில் அதிரடியாக விளையாடக்கூடிய ப்ரேவிஸ் போன்ற திறமையான வீரரை ஆர்சிபி, மும்பை அணிகள் தவற விட்டதாக டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இது பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நிறைய அணிகள் அவரை தவற விட்டன என்பதே என்னுடைய செய்தியாகும். ப்ரேவிஸை மெகா ஏலத்தில் வாங்காதது ஐபிஎல் அணிகள், உரிமையாளர்கள் அல்லது முக்கிய பொறுப்பாளர்களின் மிகப்பெரிய தவறு என்று நான் கருதுகிறேன். அவரை வாங்குவதற்கு அவர்களுக்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது”
“குறிப்பாக ஆர்சிபி அணிக்கு நல்ல வாய்ப்பிருந்தது. அதற்கு முன்பாக அவரை வாங்கி விடுவித்த மும்பை மீண்டும் வாங்க விரும்பவில்லை. எனவே அது நிறைய அணிகளுக்கு மிகப்பெரிய இழப்பு என்பதையே நான் சொன்னேன். என்னுடைய ட்வீட் அவருடைய திறமையைக் காண்பிப்பதாக இருந்தது. சிஎஸ்கே அணி கூட அவரை காயமடைந்த வீரருக்கு மாற்றாக வாங்கினார்கள்”
இதையும் படிங்க: ஆர்சிபி ரசிகர்களுக்கு 2.75 கோடி.. கூட்ட நெரிசல் பிரச்சனையில் 2வது முறையாக அறிவித்த பெங்களூரு அணி
“சிலர் என்னுடைய ட்வீட்டை தவறாக புரிந்து கொண்டார்கள். ஐபிஎல் தொடரின் விதிமுறைகள் குறித்து என்னால் எதுவும் செய்ய முடியாது. ப்ரேவிஸ் எப்போது கியரை மாற்ற வேண்டும், பெடலில் இருந்து எப்போது காலை எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்தவர். இயற்கையாகவே பந்தை அதிரடியாக அடிக்கும் திறமைக் கொண்ட அவர் எதிரணி பவுலிங் துறைக்கு பயத்தைக் கொடுக்கக்கூடியவர். அப்படிப்பட்ட வீரரைத் தான் நீங்கள் உங்களுடைய அணியில் இருப்பதை விரும்புவீர்கள்” என்று கூறினார்.