ஐசிசி-யின் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூன் 1-ஆம் தேதி நேற்று டெல்லாஸ் நகரில் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இன்றி அமைதியாக துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகள் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அமெரிக்கா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. கனடா அணி சார்பாக அதிகபட்சமாக நவநீத் 61 ரன்களையும் நிக்கோலஸ் 51 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அமெரிக்கா அணியானது முதல் ஓவரிலேயே துவக்க வீரரை இழந்தாலும் அதன் பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. குறிப்பாக 17.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்த அமெரிக்கா அணி 197 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அமெரிக்க அணி சார்பாக கவுஸ் 65 ரன்களையும், ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்களையும் குவித்து அசத்தினர். அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் அமெரிக்க அணி சார்பாக விளையாடிய அதிரடி ஆட்டக்காரரான ஆரோன் ஜோன்ஸ் முதல் டி20 உலக கோப்பை போட்டியிலேயே மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளார்.
அந்த வகையில் உலக கோப்பை டி20 ஆட்டத்தில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக கிரிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் போது ஒரே ஆட்டத்தில் 11 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.
இதையும் படிங்க : நீங்க ஏன் இப்படி விளையாடுறீங்க? ஒழுங்கா பார்முக்கு வாங்க.. பாகிஸ்தான் வீரரை நேரடியாக – அதட்டிய ரசிகை
அதேபோன்று அதே 2007-ஆம் ஆண்டு தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 10 சிக்ஸர்களை விளாசி இரண்டாவது இடத்தினையும் அவரே வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று அமெரிக்க அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட 10 சிக்ஸர்களின் மூலம் இரண்டாவது இடத்தில் இருக்கும் கெயிலின் சாதனையை அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



