
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றியை நழுவ விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் எடுத்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
அதனால் 75/0 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்புறம் விராட் கோலி, கில், கேஎல் ராகுல், அக்சர் பட்டேல் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதே போல கடைசி நேரத்தில் போராடிய சிவம் துபேவும் ஃபினிஷிங் செய்யாமல் அவுட்டானார்.
சுமாரான முடிவு:
அதை விட கடைசி விக்கெட்டுக்கு 1 ரன் மட்டுமே தேவைப்பட்ட போது சிங்கிள் எடுக்க முயற்சிக்காத அர்ஷ்தீப் சிங் டக் அவுட்டாகி வெற்றியை கோட்டை விட்டது ரசிகர்களை கடுப்பாக்கியது. இந்நிலையில் ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொள்ளக்கூடிய சிவம் துவே தற்சமயத்தில் ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட அவரை முதல் போட்டியில் கௌதம் கம்பீர் 8வது இடத்தில் களமிறக்கியது எந்த வகையிலும் சரியான முடிவல்ல என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக 4வது இடத்தில் களமிறங்கிய இடதுகை பேட்ஸ்மேன் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சிவம் துபே விளையாடியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “வாஷிங்டன் சுந்தர் ஏன் மேல் வரிசையில் வந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை உங்களுக்கு இடது கை பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் சிவம் துபே இருக்கிறார்”
“ஆனால் அவரை அனுப்பாத நீங்கள் சுந்தரை அனுப்பினீர்கள். சுந்தர் வெளியேறியதும் ஸ்ரேயாஸ், ராகுல், அக்சர் பட்டேல் ஆகியோர் வந்தனர். அப்போது ஏன் துபே மேலே களமிறங்கவில்லை என்பது கேள்விக்குறியாகும். இந்த விஷயத்தில் கௌதம் கம்பீர் ஏதோ வித்தியாசமாக சிந்திக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் சிவம் துபே 8வது இடத்தில் பேட்டிங் செய்வதை நீங்கள் விரும்பக் கூடாது”
இதையும் படிங்க: ஐ.பி.எல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னர் தோனி எடுத்துள்ள புதிய முடிவு – அணியின் நன்மைக்காக தான் எல்லாம்
“அவரை நீங்கள் மேல் வரிசையில் களமிறக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேலுக்கு கீழே களமிறக்கியுள்ளீர்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற உள்ளது. அதில் வென்று இலங்கை அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.