கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 14 வயதில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்ததோடு மட்டுமின்றி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியிலும் இடம் கிடைக்க அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் உலகக்கோப்பை வென்ற அணியிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அவரை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சுக்கள் இருந்து வந்தன.
வைபவ் சூர்யவன்ஷியை அவசரப்பட்டு இந்திய அணியில் சேர்க்கக்கூடாது : ஆகாஷ் சோப்ரா
இவ்வேளையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி இதுவரை தான் விளையாடியுள்ள 15 ஆட்டங்களில் நான்கு அரைசதம் மற்றும் ஒரு சதம் என 680 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் 29 பந்துகளை 97 ரன்கள் குவித்து பல்வேறு உலக சாதனைகளை அவர் நிகழ்த்தியிருந்தார்.
இதன் காரணமாக விரைவில் அவரை இந்திய தேசிய அணியில் இணைக்க வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வேளையில் வைபவ் சூர்யவன்ஷியை உடனடியாக இந்திய அணியில் சேர்க்கக்கூடாது என்றும் அப்படி செய்தால் அது தவறான முடிவாக மாறிவிடும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்த ஐ.பி.எல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அடுத்த டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் உள்ளது. ஐபிஎல் தொடரை பொருத்தவரை இந்தியாவின் மிகச்சிறந்த டி20 தொடர் என்பதற்கு மாற்று கருத்தும் இல்லை. ஆனால் ஏற்கனவே சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சூரியவன்ஷியை தேர்வு செய்வது சரியான விடயம் கிடையாது.
இந்த தொடரில் அபிஷேக் ஷர்மா 563 ரன்களுடனும், சஞ்சு சாம்சங் 477 ரன்களுடன் சிறப்பாக விளையாடும் வேளையில் அவர்கள் இருவரது வாய்ப்பை நீட்டிக்க வேண்டும். அப்படி அவர்கள் இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் கொடுத்தால் அது தவறான முடிவாக அமையும். சூர்யவன்ஷியை பொறுத்தவரை தற்போது அவருக்கு 15 வயது தான் ஆகிறது.
இதையும் படிங்க : அடுத்த 2027 ஐ.பி.எல் தொடரில் தோனி சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவாரா? – காசி விஸ்வநாதன் பதில்
எனவே அவசரப்பட்டு அவரை அணியில் சேர்த்து பின்னர் அவர் ஒரு மோசமான காலகட்டத்தை சந்தித்தால் வேறொரு புதிய வீரரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் தேர்வுக்குழுவினருக்கு ஏற்படும். அவருக்கு இன்னும் 20 ஆண்டுகால கரியர் மீதமுள்ளது. எனவே அவரை அணியில் சேர்க்க அவசரம் காட்டத் தேவையில்லை என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



