சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 44 வயதான தோனி இனியும் தொடர்ந்து விளையாட முடியாது என்கிற காரணத்தினால் இந்த ஆண்டு தனது கடைசி போட்டியில் விளையாடி விட்டு ஓய்வு பெறுவார் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்த 2026 ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தோனி கணுக்கால் பகுதியில் காயத்தை சந்தித்தார்.
தோனியின் எதிர்காலம் குறித்து பேசிய : காசி விஸ்வநாதன்
இதன் காரணமாக ஆரம்பகட்ட போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று நிர்வாகம் அறிவித்திருந்த வேளையில் லீக் சுற்றின் முடிவில் ஒரு போட்டியில் கூட தோனி விளையாடாமல் இறுதியாக கட்டை விரல் காயத்தை காரணம் காட்டி சென்னை அணியில் இருந்து ஒரு போட்டிக்கு முன்னதாகவே வெளியேறி ராஞ்சிக்கு திரும்பினார். இதன் காரணமாக தற்போது தோனியின் ஓய்வு குறித்த யூகங்கள் அதிகரித்துள்ளன.
ஏனெனில் அடுத்த ஆண்டு தோனி நிச்சயம் விளையாட மாட்டார் என்றும் அவர் எப்பொழுதுமே அமைதியான முறையில் ஓய்வை அறிவிப்பார் என்பதால் இம்முறையும் திடீர் ஓய்வை அறிவித்து விடுவார் என்று பலரும் பேசி வருகின்றனர். இவ்வேளையில் தோனியின் எதிர்காலம் குறித்தும் அவரது ஓய்வு முடிவு குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : தோனி அடுத்த ஆண்டு விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் அவர் தன்னுடைய கடைசி போட்டியை சேப்பாக்கத்தில் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். அதனை அவர் பூர்த்தி செய்வார் என்று நினைக்கிறேன். இருப்பினும் அந்த முடிவு மொத்தமும் அவர் கையில் தான் உள்ளது. அவரது தனிப்பட்ட முடிவுகளில் நாங்கள் குறுக்கிட மாட்டோம்.
இதையும் படிங்க : நான் அவுட்டானதுக்கு அப்புறம் தான் எனக்கு அந்த மேட்டரே தெரிய வந்தது – வைபவ் சூர்யவன்ஷி பேட்டி
எப்பொழுதுமே சிஎஸ்கே அணிக்கு தோனி முக்கியமானவர் எனவே அடுத்த ஆண்டு ஒரு வீரராகவோ அல்லது வழிகாட்டியாகவோ, பயிற்சியாளராகவோ எந்த பொறுப்பில் வேண்டுமென்றாலும் அவர் சிஎஸ்கே அணியின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். நிச்சயம் தோனி ரசிகர்களுக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி விட்டு ஓய்வை அறிவிப்பார் என்று தான் நம்புவதாகவும் காசி விஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.



