
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது ஜூலை 2-ஆம் தேதி ஃபர்மிங்ஹாம் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது :
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு தங்களது முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 269 ரன்களையும், ஜடேஜா 89 ரன்களையும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது :
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக 510 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணி 3 விக்கெட்டை இழந்து விட்டதால் இன்றைய போட்டியில் நிச்சயம் அந்த அணி ஆல் அவுட்டாக வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாகும்.
இந்நிலையில் இங்கிலாந்து அணி தற்போது சந்தித்துள்ள இந்த நிலையில் இருந்து இந்த போட்டியை வெல்வது மிக கடினம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி தற்போதைக்கு தேவையான ரன்களை குவித்து சிறப்பான இடத்தில் இருப்பதாக நினைக்கிறேன்.
டெஸ்ட் வரலாற்றை வைத்து பார்க்கும் போது இந்திய அணி இவ்வளவு ரன்கள் அடித்தும் அதன்பிறகு இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதே என்னுடைய கருத்து. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மிகச் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் இங்கிலாந்து அணி எளிதில் சுருண்டு விடவும் வாய்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க : எல்லாம் ஓகே.. 269 ரன்ஸ் அடிச்சும் இதை ஏன் மிஸ் பண்ண.. தந்தையிடம் இருந்து வந்த கால் குறித்து – சுப்மன் கில் பேச்சு
மாடர்ன் டே கிரிக்கெட்டில் எந்த அணி எப்படி விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு என்ற ஒரு புள்ளி விவரம் இருக்கிறது. அந்த வகையில் பார்க்கையில் நிச்சயம் இங்கிருந்து இந்த போட்டியை இங்கிலாந்து அணியால் வெல்ல முடியாது. அதே வேளையில் இந்திய அணி பாலோ ஆன் கொடுத்தால் இன்னிங்ஸ் வெற்றிகூட பெற வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.