வெஸ்ட் இண்டீஸ் எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் முக்கியமான 3வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. கயானாவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ப்ரெண்டன் கிங் 42 ரன்களும் ரோவ்மன் போவல் 40* ரன்களும் எடுத்த உதவியுடன் 159/5 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்கள் சாய்த்தார்.
அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அறிமுகமாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 1, சுப்மன் கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் தன்னை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் 83 (44) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா 49* ரன்களும் கேப்டன் பாண்டியா 20* ரன்களும் எடுத்ததால் 17.5 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து இந்தியா வென்றது.
சுயநலமான பாண்டியா:
முன்னதாக இந்த தொடரில் அறிமுகமாக களமிறங்கி முதலிரண்டு போட்டிகளில் 39, 51 என அதிகபட்ச ஸ்கோர் அடித்து இதர வீரர்களை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் போராடிய திலக் வர்மா இப்போட்டியிலும் ஆரம்பத்திலேயே விக்கெட்கள் விழுந்த போது நங்கூரமாக நின்று 49* ரன்கள் எடுத்தார். குறிப்பாக 18வது ஓவரின் 4வது பந்தில் 49 ரன்களை தொட்ட அவருக்கு அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்து 50 ரன்கள் தொடும் வாய்ப்பை கேப்டன் பாண்டியா வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதை செய்யாமல் சிக்ஸர் அடித்த பாண்டியா தனது பெயரில் ஃபினிஷிங் செய்தது ரசிகர்களை அதிருப்தியில் வைத்துள்ளது. ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே இளம் வயதில் கடினமாக உழைத்து வெற்றிக்கு போராடிய திலக் வர்மா 50 ரன்களை தொடுவது அடுத்து வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும். மேலும் 2014 டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான செமி ஃபைனலில் ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பை பெற்றும் அதை வெற்றியை போராடிக்கொண்டு வந்த விராட் கோலிக்கு கேப்டன் தோனி கொடுத்தார்.
அதை சுட்டிக்காட்டும் ரசிகர்கள் நீங்கள் எப்போதுமே தோனியாக முடியாது என்றும் உங்களைப் போன்ற சுயநலமான கேப்டனை பார்த்ததில்லை என்றும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் 14 பந்தில் வெறும் 2 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸர் அடிக்க என்ன அவசியம் என்று பாண்டியா மீது முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக இது உலக கோப்பையாக இருந்தால் ரன்ரேட்டை கருத்தில் கொண்டு அப்படி சிக்ஸர் அடித்ததில் ஒரு நியாயம் இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தமது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “திலக் வர்மா அபரமாக செயல்பட்டார். குறிப்பாக தன்னுடைய முதல் 3 போட்டிகளில் 30 ரன்கள் அடித்த இந்தியராகவும் அவர் சாதனை படைத்தார். கடந்த போட்டியில் 50 ரன்கள் அடித்து இம்முறையும் அதை நெருங்கிய அவர் அரை சதமடித்திருக்க வேண்டும்”
“ஏனெனில் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய அவர் பின்னர் சூரியகுமாருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் விளையாடினார். அப்போது வந்த பாண்டியா அதிரடியாக விளையாடாமல் கடைசி வரை நிற்க வேண்டுமென்று அவருக்கு ஆலோசனை வழங்கினார். ஆனால் இறுதியில் அவரே சிக்ஸர் அடித்தார். ஒருவேளை ரன்ரேட்டுக்காக விளையாடினால் அது வித்தியாசத்தை ஏற்படுத்தும். மேலும் திலக்கிடம் சாதாரணமாக விளையாடுங்கள் என்று சொல்லி விட்டு கடைசியில் அவரே பெரிய ஷாட் அடித்தார்”
இதையும் படிங்க:IND vs WI : பயமறியாத காளையாக சூரியகுமாரின் சாதனை சமன் – ரோஹித்தின் 17 வருட ஆல் டைம் சாதனையும் உடைத்த திலக் வர்மா
“குறிப்பாக 13 பந்துகளில் 1 ரன்கள் தேவைப்படும் போது பாண்டியா சிக்சர் அடித்தார். இந்திய அணியில் சொந்த சாதனைகளுக்காக விளையாடக்கூடாது என்ற கலாச்சாரம் இருப்பதை அனைவரும் விரும்புகிறோம். அந்த சூழ்நிலையில் 12 பந்தில் 2 ரன்கள் தேவைப்படும் போது நீங்கள் அவுட்டாகி சென்றாலும் தவறில்லை. மொத்தத்தில் அந்த சமயத்தில் திலக் வர்மாவின் அரை சதம் தடுக்கப்பட்டது என்பதே என்னுடைய கருத்தாகும்” என்று கூறினார்.