வேணும்னா பாருங்க, டி20 உ.கோ’யில் ராகுல் அதிக ரன்கள் அடிச்சு கப் வாங்கி கொடுக்கப்போறாரு – முன்னாள் வீரர் அதிரடி கணிப்பு

KL Rahul
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியுள்ளது. அப்படி உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் நம்பர் ஒன் அணியாக இத்தொடரில் களமிறங்கினாலும் கோப்பையை வெல்லுமா என்ற நம்பிக்கை பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் காணப்படவில்லை.

INDIA Dinesh Karthik Chahal Arshdeep Singh Harshal Patel Bhuvaneswar Kumar Rohit Sharma

- Advertisement -

ஏனெனில் மினி உலகக் கோப்பையை போன்ற சமீபத்திய ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்வியும் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியதும் இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. காரணம் பும்ராவை தவிர்த்து இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார் போன்ற பவுலர்கள் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் 130+ கி.மீ வேகத்தில் மட்டும் வீசக்கூடிய மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் சமீபத்திய போட்டிகளில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி சுமாரான பார்மில் உள்ளனர்.

ராகுல் அசத்துவாரு:
எனவே சுமாரான பந்து வீச்சை கொண்டுள்ள இந்தியா இத்தொடரின் கோப்பையை வெல்வதற்கு பேட்டிங் துறை எக்ஸ்ட்ராவாக உழைக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளதும் அறிமுகமானது முதல் கடந்த ஒன்றரை வருடங்களில் அபாரமாக செயல்பட்டு உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக உயர்ந்துள்ள சூரியகுமாரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். ஆனால் துணை கேப்டனாக களமிறங்கும் கேஎல் ராகுல் தடுமாற்றமான பார்மில் இருப்பது ஆரம்பம் முதலே இந்திய ரசிகர்களுக்கு கவலையை கொடுத்து வருகிறது.

KL-RAHUL

குறிப்பாக காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த பின் பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் கோல்டன் டக், கத்துக்குட்டி ஹாங்காங்க்கு எதிராக மெதுவாக சேர்த்த 36 (39) ரன்கள், சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 107 ரன்களை துரத்தும் போது உலகிலேயே மெதுவாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேனாக மோசமான உலக சாதனை படைத்த 51* (56) ரன்கள் என சுமாரான செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்தி வருகிறார். அத்துடன் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது பயிற்சி போட்டியில் நங்கூரமாக நின்ற அவர் 73 (55) என்ற பெரிய ரன்களை எடுத்தாலும் வழக்கம் போல கடைசி வரை அதிரடியை துவக்காமலேயே கடைசியில் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

இதனால் அவர் மீது நிறைய ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தாலும் இந்த உலக கோப்பையில் ராகுல் அபாரமாக செயல்பட்டு அதிக ரன்கள் குவித்து கோப்பையை வென்று கொடுப்பார் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2022 டி20 உலக கோப்பையில் கேஎல் ராகுல் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேனாக இருப்பார். ஏனெனில் அவருக்கு 20 ஓவர்களும் விளையாடி கடைசி வரை நின்று பேட்டிங் செய்யும் வாய்ப்புள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிட்ச்களில் பந்து நன்றாக பேட்டுக்கு வரும் என்பதால் அங்குள்ள மைதானங்கள் அவருக்கு அற்புதமாக பொருந்தும்” என்று கூறினார்.

chopra

அத்துடன் பும்ரா இல்லாத குறையை அர்ஷிதீப் சமாளிப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “அந்த வேலையை அர்ஷிதீப் சிங் செய்வார் என்று நான் நம்புகிறேன். புதிய ஓவர்களில் பந்து வீசக்கூடிய அவர் டெத் ஓவர்களிலும் அசத்தும் திறமை பெற்றுள்ளார். அத்துடன் மிடில் ஓவர்களிலும் அவர் பந்து வீசுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களை கொண்ட ஆடுகளங்களில் நிச்சயம் அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார்”

“நீங்கள் உங்களது அணியை உலகிலேயே மிகச் சிறந்தது என்று சொன்னால் உங்களது அணியில் ஆழமான திறமையும் இருக்கும். அல்லது உலகிலேயே உங்களிடம் மிகச்சிறந்த லீக் (ஐபிஎல்) இருப்பது உண்மையானால் எந்த வித சந்தேகமுமின்றி இந்த உலகக் கோப்பையை வெல்லப் போகும் அணியாகவும் உங்களது அணி (இந்தியா) இருக்கும்” என்று கூறினார்.

Advertisement