
ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளானது செப்டம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இம்முறை ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற இருக்கின்றன. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருப்பதன் காரணமாக இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரின் ஏ பிரிவில் : இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும் பி பிரிவில் : ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
அதன் பிறகு லீக் சுற்றுகளின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இந்திய அணியானது தங்களது முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாட உள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று துபாய் சென்று அங்குள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகள் எது? என்பது குறித்த கணிப்பினை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் விளையாட வாய்ப்புள்ள இரண்டு அணிகள் குறித்த தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போதைய இலங்கை அணியிடம் எல்லா சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் இருக்கின்றனர். அதனால் இந்த தொடரில் இலங்கை அணி ஒரு பலமான அணியாக இருக்கும். அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியுடன் இந்தியா ஆசிய கோப்பை தொடரில் விளையாடுமா? – பி.சி.சி.ஐ சார்பில் வெளியான தகவல்
இந்த 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளே இறுதிப்போட்டியில் மோத வாய்ப்புள்ளதாகவும் தான் கூறுவதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.