
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக சில வீரர்களை டிரேடிங் முறையில் வாங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதன் படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு சிஎஸ்கே அணி விரும்புவதாக செய்திகள் காணப்பட்டன.
இருப்பினும் அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தம்மை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கேட்டுக்கொண்டதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து நெருப்பின்றி புகையாது என்பது போல் சாம்சன் ராஜஸ்தானுக்காக அடுத்த வருடம் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து கேப்டன் பதவியையும் கொடுத்த ராஜஸ்தான் அணியிலிருந்து சாம்சன் விலக விரும்புவதற்கு வைபவ் சூர்யவன்சியே காரணம் என்று முன்னாள் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஏனெனில் 14 வயது மட்டுமே நிரம்பிய அவர் கடந்த தொடரில் அறிமுகமாகி மிரட்டலாக பேட்டிங் செய்து சாதனைகளைப் படைத்தார். எனவே வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு ராஜஸ்தான் அணி அவருக்கே தொடர்ந்து வாய்ப்பளிக்கும் என்று ஆகாஷ் கணித்துள்ளார்.
அதனால் சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேறும் முடிவை எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் ஏன் வெளியேற விரும்புகிறார்? என்பது சுவாரசியமானது. கடந்த மெகா ஏலத்தில் ஜெய்ஸ்வால் இருப்பதால் ஜோஸ் பட்லரை ராஜஸ்தான் அணி விடுவித்தார்கள். சாம்சன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாட விரும்பினார்”
“ராஜஸ்தான் அணியில் வீரர்களை விடுவிப்பதிலும் தக்க வைப்பதிலும் அவருடைய உள்ளீடுகள் அதிகமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் தற்போது வைபவ் சூரியவன்சி வந்துள்ளார். அதனால் ஜெய்ஸ்வால் – வைபவ் ஆகிய 2 ஓப்பனர்கள் இருக்கிறார்கள். துருவ் ஜுரேலை ராஜஸ்தான் மேல் பேட்டிங் வரிசையில் விளையாட வைக்க விரும்புகிறது.எனவே சாம்சன் வெளியேற விரும்புகிறார்”
இதையும் படிங்க: கில், ஜடேஜாவை விட அவங்க தான் தகுதியானவங்க.. தனது லெவன் பற்றிய இந்திய ரசிகர்கள் கேள்விக்கு ப்ராட் பதில்
“சாம்சன் அப்படி நினைத்தால் அதற்கு வாய்ப்பிருக்கிறது. இதற்கெல்லாம் தொடர்பு இருக்கிறது. ஆனால் சாம்சன் – ராஜஸ்தான் மனதில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை அவர் வெளியேறினால் அவரை வாங்க சென்னையை விட கொல்கத்தா அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில் அவர்களிடம் நல்ல இந்திய விக்கெட் கீப்பர் இல்லை. ரஹானே நன்றாக கேப்டன்ஷிப் செய்து ரன்கள் அடித்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் டாப் ஆர்டரில் விளையாடுவதில் அவரிடம் பிரச்சனை இருக்கிறது. அத்துடன் வெங்கடேஷ் ஐயரை விடுவித்தால் அவர்களுக்கு சாம்சனை வாங்கும் அளவுக்கு 24 கோடிகள் கிடைக்கும்” என்று கூறினார்.