
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. அந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தை தவிர்ப்பதற்காக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆச்சரியப்படும் வகையில் அந்த 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறவில்லை.
அதன் காரணமாக ஏராளமான ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் அவரை விமர்சித்து வருகிறார்கள். உண்மையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் நாட்டுக்காக பும்ரா முழுமையாக 5 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை எடுத்து அட்டகாசமாக விளையாடினார். இருப்பினும் அத்தொடரின் இறுதியில் சந்தித்த காயத்தால் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் இங்கிலாந்தில் முழுமையாக 5 போட்டிகளில் விளையாட முடியவில்லை.
இருப்பினும் ஆஸ்திரேலியாவில் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று அவரை பாராட்டிய இந்தியர்களில் பலர் இன்று 6 மாதங்களுக்குள் வேறு மாதிரியாக விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அப்போது வாசிம் அக்ரம் மற்றும் தம்மை விட பும்ரா சிறந்த பவுலர் என்று யூனிஸ் அவர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக திறன் மற்றும் வித்தியாசமாக சிந்திப்பதில் தங்களை விட பும்ரா சிறந்தவர் என்று யூனிஸ் சொன்னது குறித்து ஆகாஷ் சோப்ரா தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் காரில் பயணம் செய்தோம். வக்கார் யூனிஸ் எங்களுடன் பயணித்தார். அப்போது தனது பந்து வீச்சில் கொண்டிருந்த வேரியேஷன் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக வாசிம் அக்ரமை கிரிக்கெட் உலகம் மதிக்கிறது”
“அவர் சிறப்புக்கு சமமாக சிறந்து விளங்கினார். அதே போல பும்ரா வலது கை வாசிம் அக்ரம் அல்லவா? என்று யூனிஸிடம் கேட்டேன். அதற்கு இல்லை, பும்ரா எங்கள் அனைவரையும் விட சிறந்தவர். அவருடைய வயதில் நாங்கள் இது போன்ற சிந்தனைகளைக் கொண்டிருக்கவில்லை. அவருடைய திறன் சிறப்பானது. சிந்தனைகள் வித்தியாசமானது. எனவே பும்ரா இந்த உலகம் பார்த்த சிறந்த பவுலர் என்று யூனிஸ் சொன்னார்”
இதையும் படிங்க: ஆஸியில் கிரேட்ன்னு புகழ்ந்தவங்க.. இன்று இது புரியாம பும்ராவை குறை சொல்லாதீங்க.. பரத் அருண் பதிலடி
“ஜஸ்ப்ரித் பும்ராவை விட சிறந்த கேப்டன் இருக்க முடியாது என்று பலரும் சொன்னார்கள். பவுலர்கள் ஏன் கேப்டனாக கூடாது என்றும் கருத்துக்கள் வந்தன. ரோஹித் தலைமையில் அவர் துணைக் கேப்டனாக செயல்பட்டார். ரோஹித் இல்லாத போது பெர்த் மைதானத்தில் கேப்டனாக செயல்பட்ட அவர் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்று கொடுத்தார். எனவே அவர் கேப்டனாக வர தகுதியானவராகவே இருந்தார்” என்று கூறினார்.