
இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியாவை மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து சாய்த்தது. அதனால் தொடரை வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து தக்க வைத்துக் கொண்டது.
முன்னதாக இந்தத் தொடரில் இந்திய அணி வெறும் ஒரு முழு நேர வேகப்பந்து வீச்சாளர் 4 ஸ்பின்னர்களுடன் விளையாடி வருகிறது. ஆனால் அது மிகவும் தவறான அணி தேர்வு என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் ஸ்பின்னர்களை வைத்தே 16 ஓவர்கள் வீச முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே இந்தியாவின் வெற்றிக்கு அடுத்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவுடன் ஷமி, அர்ஷ்தீப் ஆகியோரும் விளையாடுவது அவசியம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு 4 ஸ்பின்னர்கள் தேவை என்று நீங்கள் சொல்லலாம். நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களால் 16 ஓவர்களில் ஸ்பின்னர்கள் வைத்து போட முடியுமா?”
“அதை உங்களால் சரியாக செய்ய முடியாது. கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு நீங்கள் ஒரு ஓவர் மட்டுமே கொடுத்தீர்கள். ஆனால் வெறும் ஒரு ஓவருக்காக நீங்கள் ஒரு வீரரை விளையாட வைப்பது வேடிக்கையான விஷயம். அந்த வகையில் நாம் சரியான அணியை தேர்ந்தெடுத்தோம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அர்ஷ்தீப் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடினார்கள்”
“பின்னர் ஷமி விளையாடிய போதும் பாண்டியா அவருடன் இருந்தார். ஏனெனில் இந்திய அணியில் போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்று அர்த்தமில்லை. நீங்கள் அவர்களை விளையாட விரும்பவில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல சுழலுக்கு சாதகமாக இருந்த சென்னை மைதானத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி தாக்கத்தையும் ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: ஐசிசி டாப் 10க்குள் நுழைந்த தமிழக வீரர் வருண்.. ராக்கெட்டாக திலக் வர்மா.. ஹெட், பாபர் அசாமை முந்த வாய்ப்பு
இருப்பினும் ராஜ்கோட் மைதானத்திற்கு தகுந்தார் போல் கௌதம் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் சுழல் பந்து துறையில் சரியான அணியை தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அனைத்து நேரங்களிலும் நான்கு ஸ்பின்னர்கள் வைத்து வெற்றி பெறுவது மிகவும் அசாத்தியமான ஒன்றாகும். அதனால் அதை உணர்ந்து அடுத்த போட்டியில் ஆவது இந்திய அணி நிர்வாகம் சரியான கலவையை தேர்ந்தெடுப்பது வெற்றிக்கு அவசியமாக பார்க்கப்படுகிறது.