
ஐசிசி 2024 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இருப்பினும் அப்போட்டியில் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் கொடுத்த கேட்ச்சை சூரியகுமார் யாதவ் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே டேவிட் மில்லர் நேராக சிக்சர் அடித்தார்.
அதை லாங் ஆஃப் திசையிலிருந்து ஓடி வந்த சூரியகுமார் கச்சிதமாக பிடித்த போதிலும் பேலன்ஸ் இழந்ததால் களத்திற்குள் பந்தை தூக்கிப்போட்டு விட்டு பவுண்டரிகள் சென்றார். அதைத் தொடர்ந்து மீண்டும் களத்திற்குள் வந்த அவர் கேட்ச் பிடித்து இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்றார். ஆனால் பந்தை தூக்கிப் போடும் போது அவருடைய காலில் நுனிப்பகுதி பவுண்டரியில் உரசியதாக பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
நகர்ந்தது பவுண்டரி அல்ல:
அது போக அந்த கேட்ச் பிடிப்பதற்கு முன்பாகவே வேண்டுமென்றே பவுண்டரி சில அடிகள் பின்னோக்கி நகர்த்தப்பட்டிருந்ததாகவும் பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஜாம்பவான் ஷான் பொல்லாக் ஏற்கனவே பதிலடி கொடுத்த நிலையில் தற்போது முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவும் பதிலளித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“மைதானத்தில் வெள்ளை கோடு தெரிவதால் அதை யாரோ கால்களால் பின்னால் தள்ளியிருப்பார்கள் என்று மக்கள் சொல்கிறார்கள். அது போன்றவர்களுக்கு “எதுவும் நகர்த்தப்படவில்லை. உங்களுடைய மூளை தான் கொஞ்சம் நகர்த்தப்பட்டுள்ளது” என்று நான் சொல்வேன். ஏனெனில் கொஞ்சம் மனதை திறந்து விதிமுறைகளை புரிந்து கொள்ளுங்கள். முதலில் அந்த லைன் பவுண்டரியாக கருதப்படும் என்பது உண்மைதான்”
“ஆனால் அது ஏன் நகர்த்தப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது மைதானத்தில் நிறைய பிட்ச்கள் இருப்பதால் நகர்த்தப்பட்டுள்ளது. ஒரு போட்டிக்கும் மற்றொரு போட்டிக்கும் இடையே பிட்ச் மாற்றப்படும் போது அதற்கு தகுந்தார் போல் பவுண்டரி லைனையும் அட்ஜஸ்ட் செய்வார்கள். மறுபுறம் பார்படாஸ் நகரில் ஃபைனல் முதல் முறையாக விளையாடவில்லை. எனவே அந்த கோடு உண்மையான பிட்ச்சுக்கானது”
இதையும் படிங்க: டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான போட்டியை தூக்கத்தால் தவறவிட்ட வங்கதேச வீரர் – விவரம் இதோ
“ஆனால் அதை மாற்றும் போது பவுண்டரி அளவுகளும் மாறும். அப்படி மாற்றும் போது அந்த வெள்ளைக் கோடுகள் அப்படியே விடப்படும். அவ்வளவு தான் வேறு எதுவுமில்லை. சூரியகுமார் கேட்ச் பிடித்து உள்ளே சென்று தூக்கி போட்டு விட்டு மீண்டும் வந்து பிடித்தது தெளிவாக இருக்கிறது. அது தெளிவாக காட்டப்படவில்லை என்றாலும் நிறைய கேமராக்கள் இருக்கிறது. வங்கதேசத்தில் நடைபெறும் சாதாரண டி20 தொடரிலேயே 26 கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே உலகக்கோப்பையில் 30 – 40 கேமராக்கள் இருக்கும் என்பதால் எதையும் மறைக்க முடியாது” என்று கூறினார்.