
ஐசிசி 2024 டி20 ஐசிசி உலகக் கோப்பை வெற்றியுடன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதை தொடர்ந்து கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சொல்லப்போனால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்டார். மேலும் 2022க்குப்பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.
எனவே ரோஹித்துக்கு பின் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஹர்திக் பாண்டியா சுமாரான ஃபிட்னஸ் காரணமாக இந்தியா விளையாடும் அனைத்து தொடர்களிலும் விளையாடுவதில்லை. எனவே புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவரை கழற்றி விட்டு சூர்யகுமாரை கேப்டனாகவும் சுப்மன் கில்லை கேப்டனாகவும் தேர்ந்தெடுத்துள்ளார்.
பறிபோன இன்னொரு வாய்ப்பு:
இந்நிலையில் சூரியகுமாரை டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அறிவித்துள்ள தேர்வுக்குழு ஒருநாள் கிரிக்கெட்டில் கழற்றி விட்டு மறைமுக ஆப்பு வைத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். குறிப்பாக 2023 உலகக்கோப்பை ஃபைனல் உட்பட ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் இதுவரை சிறப்பாக செயல்பட்டதில்லை. எனவே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் கழற்றி விடுவதற்காகவே அடுத்து நடைபெறும் இலங்கை தொடரில் சூர்யகுமாரை தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கவில்லை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2023 உலகக் கோப்பை ஃபைனல் சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் சூரியகுமார் இருந்தார். 2024 டி20 உலகக் கோப்பை அணியிலும் இருந்த அவர் டேவிட் மில்லர் கேட்சை பிடித்தார். ஆனால் தற்போது அவர் ஒருநாள் அணியில் இல்லை. இது பற்றி அஜித் அகர்கரிடம் கேட்ட போது டி20 கிரிக்கெட்டில் ஸ்பெஷல் பிளேயரான சூரியகுமாரை தற்போதைக்கு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு கருதவில்லை என்று சொன்னார்”
“எனவே அடுத்து நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு சூரியகுமார் தேர்வு செய்யப்பட மாட்டார் என்றே நீங்கள் கருதலாம்” எனக் கூறினார். அவர் கூறுவது போல டி20 கிரிக்கெட்டில் எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றும் சூரியகுமார் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார்.
இதையும் படிங்க: வெயிட் பண்ணாதீங்க.. கதவை உடைச்சி வாங்க.. ருதுராஜ் மற்றும் நட்டுவிற்கு நம்பிக்கை அளித்த – லட்சுமிபதி பாலாஜி
ஆனால் கொஞ்சம் மெதுவாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறும் அவர் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை. குறிப்பாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் அவர் விளையாடிய மோசமான ஆட்டத்தை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு செட்டாக மாட்டார் என்று தேர்வுக் குழுவும் கருதுவதால் சூரியகுமாரை கழற்றி விடத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.