
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் 2023 உலகக் கோப்பையில் 2 சதங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்த அவர் விரைவில் குணமடைந்த போது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது. ஆனால் அதைச் செய்யாததால் அவரை பிசிசிஐ இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது.
அந்த நிலையில் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணிக்காக வென்றார். அதன் காரணமாக அந்த அணியில் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றதால் கடந்த இலங்கை ஒருநாள் தொடரில் மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயரை உள்ளேக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுக்க 2024 துலீப் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஆனால் அந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்த அவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. குறிப்பாக இரண்டாவது போட்டியில் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு களமிறங்கிய அவர் டக் அவுட்டானது ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டது. மேலும் அவருடைய தலைமையிலான இந்தியா டி அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோற்றுள்ளது.
அதனால் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டுள்ளார். இந்நிலையில் கௌதம் கம்பீரே நினைத்தாலும் இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பில்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“வங்கதேசத்தை கடைசியாக அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட தொடரில் இந்தியா வெல்வதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் 2வது போட்டியில் மிகவும் முக்கிய பங்காற்றினர். அவருடைய முக்கியமான ஆட்டத்தாலேயே நாம் வென்றோம். ஆனால் அதன் பின் உலகம் மாறிவிட்டது. தற்போதைக்கு டெஸ்ட் அணியில் அவருக்கு எந்த வாய்ப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”
இதையும் படிங்க: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை அந்த 2 வீரர்களால் நிரப்ப முடியும் – பியூஷ் சாவ்லா நம்பிக்கை
“ஏனெனில் தற்போது அவருடைய இடத்தில் இந்திய அணியில் சர்பராஸ் கான், துருவ் ஜூரேல் ஆகியோர் உள்ளனர். மேலும் கே.எல். ராகுலும் அணியில் இருக்கிறார். அவர்களுக்குத் தான் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கருதுகிறேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் இங்கே எப்படி வருவார்?” என்று கூறினார்.