ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் ரஹானே 56, சுனில் நரேன் 44 ரன்கள் எடுத்ததால் கொல்கத்தா 107/1 என்ற வலுவான துவக்கத்தை பெற்றது. அதனால் 200 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை 20 ஓவரில் வெறும் 174 ரன்களுக்கு சிறப்பாக பௌலிங் செய்து பெங்களூரு கட்டுப்படுத்தியது.
அடுத்ததாக விளையாடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 59*, பிலிப் சால்ட் 56, கேப்டன் படிதார் 34 ரன்கள் அடித்து 16.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் தொடரை பெங்களூரு அணி வெற்றிகரமாக துவங்கிய நிலையில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைச் சந்தித்தது.
படிதார் அசத்தல்:
இந்நிலையில் அந்தப் போட்டியில் தரமான சுனில் நரேனுக்கு எதிராக ரஜத் படிதார் 3 சிக்ஸர்களை பறக்க விட்டு அட்டகாசம் நிகழ்த்தினார். மறுபுறம் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி ஆகிய 3 ஜாம்பவான்களும் சேர்ந்து நரேனுக்கு எதிராக 4 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளனர். அப்படிப்பட்ட நரேனுக்கு எதிராக ஒரே போட்டியில் படிதார் 3 சிக்ஸர்கள் அடித்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.
மேலும் அப்போட்டியில் இரு அணிகளின் கேப்டன்கள் செய்த தவறுகள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “படிதார் அழகாக பேட்டிங் செய்தார். சுனில் நரேனுக்கு எதிராக வெறும் 14 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 3 சிக்சர்களை அடித்தார். ரோஹித் சர்மா, விராட் கோலி, தோனி ஆகியோர் சேர்ந்து நரேனுக்கு எதிராக 13 வருடங்களில் 4 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளனர்”
மிஸ் செய்த ரஹானே:
“எனவே நரேனுக்கு எதிராக படிதாரின் மேலாதிக்கம் முன்னுக்கு வந்தது. அதே சமயம் கேப்டனாக அவர் முதல் 3 ஓவர்களில் நன்றாக செயல்பட்டார். ஆனால் 4, 5வது ஓவர்களில் ரசிக் சலாம், க்ருனால் பாண்டியா ஆகியோரை அவர் கொண்டு வந்தது சரியான முடிவல்ல. அதைப் பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய ரகானே 10 ஓவரில் கொல்கத்தா 100 ரன்கள் குவிக்க உதவினார்”
இதையும் படிங்க: இதை ஈஸியா செய்யும் போது.. 43 வயசு தோனியை கிண்டலடிச்சு கேள்வி கேட்க நீங்க யார்? கவாஸ்கர் விளாசல்
“அங்கிருந்து கொல்கத்தா 200 அடித்திருக்க வேண்டும். ஆனால் அங்கே பெங்களூரு கம்பேக் கொடுத்தது. பெங்களூரு அணியின் ஸ்பின் பவுலிங் பலவீனமானது என்று நாம் சொல்வோம். ஆனால் இம்முறை அது அவர்களுக்கு பலமாக அமைந்துள்ளது. அதே போல ரஹானே மிகவும் தாமதமாக சுனில் நரேனை பவுலிங் செய்ய கொண்டு வந்தார். அதில் அவர் ட்ரிக்கை தவற விட்டார். கொல்கத்தாவுக்கு மந்தமான துவக்கம் கிடைத்தது” என்று கூறினார்.



