ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைக்க முடியும் அல்லது ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது போன்ற சூழ்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களுடைய முதல் வீரராக அக்சர் பட்டேலை 18 கோடிக்கு தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் திறமையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஆல் ரவுண்டரான அவர் மேட்ச் வின்னராக டெல்லி அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் அக்சர் பட்டேல் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். அத்துடன் ஃபைனலிலும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
ரிஷப் பண்ட் 18 கோடி:
அப்போது விராட் கோலியுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் கேப்டன் ரிஷப் பண்ட் தான் 18 கோடிக்கு டெல்லி தக்க வைக்கப்பட வேண்டிய முதல் வீரர் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதே சமயம் அக்சர் படேலை ஏலத்தில் விட்டால் மீண்டும் வாங்குவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே அக்சர் படேல் 2வதாக தக்க வைக்கப்பட வேண்டிய வீரர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் டெல்லி அணியால் தக்க வைக்கப்பட மாட்டார் என்ற வதந்திகள் காணப்பட்டது. ஆனால் தற்போது அவரை தக்க வைப்பதாக டெல்லி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. எனவே ரிஷப் பண்ட் 18 கோடிக்கு முதல் தக்க வைப்பாக இருப்பார். இந்த அணிக்காக அக்சர் பட்டேல் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்”
டெல்லி ரிட்டன்சன்:
“4 ஓவர்களை வீசி நன்றாக பேட்டிங் செய்யக்கூடிய அவர் சிறந்த ஃபீல்டர். ஒருவேளை அவரை ஏலத்தில் விட்டால் ஆர்டிஎம் பயன்படுத்தியும் வாங்குவதற்கு அதிக செலவாகும். எனவே அவரை நீங்கள் தக்க வைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். 3வதாக குல்தீப் யாதவ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர்-மெக்குர்க் ஆகியோர் தேவைப்படுவார்கள்”
இதையும் படிங்க: பயிற்சியாளரை இப்படியா அம்போன்னு விட்டுட்டு போவீங்க.. 5 வருடம் கழித்து ஃபீல்டிங் செய்த ஜேபி டுமினி
“இருப்பினும் அவர்களில் ஒருவரை மட்டுமே உங்களால் தக்க வைக்க முடியும். அதனால் மற்றொருவரை ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கலாம். அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இளம் வீரர் அபிஷேக் போரலை 4 கோடிக்கு தக்க வைக்கலாம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



