
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங்கை கழற்றி விட்ட இந்திய அணி ஹர்ஷித் ராணாவை தேர்ந்தெடுத்தது பலரையும் கோபமடைய வைத்தது.
ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா வெல்ல ராணா உதவினார். அதற்காக இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததும் அவருக்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் கம்பீர் வாய்ப்புகளை அள்ளி வழங்கி வருகிறார். அந்த வாய்ப்பில் கடந்த சிட்னி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததைத் தவிர்த்து ராணா பெரியளவில் சாதிக்கவில்லை என்பதே நிதர்சனமாகும்.
மறுபுறம் 2022இல் அறிமுகமான அர்ஷ்தீப் சிங் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராக சாதனை படைத்து நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அப்படியிருந்தும் அவரை பெஞ்சில் அமர வைத்துள்ள கௌதம் கம்பீர் 8வது இடத்தில் விளையாடும் பவுலர் கணிசமாக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதற்காக ராணாவுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
இந்நிலையில் அரைகுறையாக பேட்டிங் செய்யக்கூடிய ராணாவை நம்பி அர்ஷ்தீப்பை கழற்றி விடுவது முக்கிய நேரத்தில் இந்தியாவுக்கு பாதகமாக அமையலாம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக அதிக டி20 விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கு ஆஸ்திரேலியாவிலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குழப்பமளிக்கிறது”
“2025 ஆசியக் கோப்பையிலும் அது நடக்கவில்லை. அடுத்த டி20 உலகக் கோப்பையில் அர்ஷ்தீப் விளையாடுவதற்கான வாய்ப்புகள் என்ன? என்பதே மனதில் முதல் கேள்வியாக எழுகிறது. 8வது இடத்தில் விளையாடுபவர் பேட்டிங் செய்பவராக இருக்க வேண்டும் என்பதே தற்போதைய இந்திய அணியின் தத்துவமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது”
இதையும் படிங்க: ரோஹித் சூரியன் உதயமாவது உண்மைமே ஆனா நைட்டில் இல்ல.. கொல்கத்தாவுக்கு பல்ப் கொடுத்த மும்பை
“அதனாலேயே அர்ஷ்தீப்புக்கு பதிலாக ராணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராணா பவுலிங் திறமையைக் காட்டிலும் பேட்டிங் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதிலிருந்து 8வது இடத்தில் விளையாடுபவர் பேட்டிங் செய்பவராக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது தெரிகிறது. ஆனால் உண்மை என்னவெனில் ராணாவிடம் 8வது இடத்தில் பேட்டிங்கில் அசத்துவதற்கு போதுமானவர் கிடையாது. அந்த இடத்தை ராணா இதுவரை பூர்த்தி செய்யவில்லை” என்று கூறினார்.