ஹர்டிக் பாண்டியா உள்ளூரில் விளையாடாம ஏமாத்துல.. இந்தாங்க டேட்டா.. இர்பான் பதானுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

Aakash Chopra 6
- Advertisement -

பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்ட 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேராக கருதப்படும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தியும் அதை அந்த 2 வீரர்களும் கேட்காததால் பிசிசிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும் காயம் மற்றும் பணிச்சுமை என்ற பெயரில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எவ்விதமான உள்ளூர் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வரும் ஹர்திக் பாண்டியா மட்டும் ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத பாண்டியாவை உள்ளூர் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட வைக்க முடியுமா? அவருக்கு ஒரு நியாயம் இஷான், ஸ்ரேயாஸ் ஐயருக்கு மட்டும் ஒரு நியாயமா? என்று இர்பான் பதான் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா பதிலடி:
இந்நிலையில் காயத்தால் தம்முடைய உடல் ஒத்துழைக்காததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை என்று முடிவெடுத்த ஹர்திக் பாண்டியா ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என இர்பான் பதானுக்கு மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார். மேலும் 2023ஆம் ஆண்டின் உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்கள் அக்டோபர் மாதம் நடந்த போது உலகக் கோப்பை விளையாடிய பாண்டியா காயமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பாண்டியா உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் ஏமாற்றவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியாவின் விஷயம் மிகவும் எளிதானது. எந்த தவறும் செய்யாத போது ஏன் அவரை நீங்கள் தண்டிக்க வேண்டும்? அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்”

- Advertisement -

“அதனாலேயே அவர் இந்தியாவுக்காக டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கான தேர்வுப் பட்டியலிலும் இல்லை. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத அவரை யாரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு கேட்க முடியாது. காயம் இருக்கும் போது எப்படி அவரைப் போன்றவரால் 4 நாட்கள் விளையாட முடியும். இந்த இடத்தில் அவருக்கு மட்டும் என்ன வித்தியாசமான விதிமுறை? ஸ்ரேயாஸ், இஷானுக்கு என்ன விதிமுறை? என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: நாட்டை விட யாரும் பெருசில்ல.. இனிமேலாவது நன்றியை காட்டுங்க.. இஷான், ஸ்ரேயாஸ் நீக்கம் பற்றி கபில் தேவ்

“அதாவது சயீத் முஸ்டாக் அலி கோப்பை அக்டோபர் – நவம்பர் மாதம் நடந்தது. அந்த சமயத்தில் இந்தியாவில் 2023 உலகக் கோப்பை நடைபெற்றது. மேலும் ஹர்திக் பாண்டியாவின் உள்ளூர் அணியான பரோடா விஜய் ஹசாரே கோப்பையில் கடைசியாக விளையாடிய தேதி 2023 டிசம்பர் 5. அதனாலேயே அவர் அந்த தொடரில் விளையாடவில்லை. ஏனெனில் அவர் என்சிஏ’வில் காயத்திலிருந்து குணமடையும் வேலையில் ஈடுபட்டார்” என்று டேட்டாவுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement