இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அதற்காக ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி தேவையற்ற விமர்சனங்களை வைத்தது. ஆனால் அதே பிட்ச்சில் 400 ரன்கள் குவித்து செயலில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த பெரிய வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை தக்க வைத்தது.

மறுபுறம் வாயில் பேசியதை செயலில் காட்டாமல் சுழலாமல் நேராக வரும் பந்துகளை கூட சரியாக எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் திணறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட் அடித்து க்ளீன் போல்ட்டானார்கள். அதனால் தங்களது பேட்ஸ்மேன்கள் தான் சிறப்பாக செயல்படவில்லை என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். அந்த நிலைமையில் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் பந்து வீச்சில் அசத்தலாக செயல்பட்ட ஆஸ்திரேலியா இந்தியாவை 109, 163 ரன்களுக்கு சுருட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தக்க பதிலடி கொடுத்துள்ளது.
நம்பிக்கை இல்லையா:
அதனால் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்துள்ள அந்த அணி தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொண்டுள்ளதுடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் நாக்பூர் மற்றும் டெல்லியை விட 4.8 டிகிரி என்ற அதிகப்படியான அளவுக்கு முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற இந்தூர் பிட்ச் மீண்டும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து இந்த வகையான பிட்ச்களுக்கு ஆதரவு கொடுத்து அதை தயாரிக்குமாறு மைதான பராமரிப்பாளர்களிடம் இந்திய அணி நிர்வாகம் தெரிவித்து வருவது தமக்கு ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் பிட்ச்சில் கவனம் செலுத்தாமல் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த உங்களால் உங்களது சொந்த மண்ணில் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்காமல் வெற்றி பெற முடியாதா? என்றும் இந்தியாவுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்திய அணியைச் சேர்ந்தவர்கள் மைதான பராமரிப்பாளர்களிடம் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு விளையாட வேண்டும் என்று காட்டமாக விமர்சித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“இந்தியா தங்களுடைய தவறுகளை தங்களது வழியில் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளங்கள் தயாரிக்கப்படுவது பற்றி இதற்கு முன் நான் பேசியுள்ளேன். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த 2 தொடர்களில் வென்றதை இந்தியா மறந்து விட்டார்களா? அதை நான் மீண்டும் சொல்கிறேன். இந்திய அணி நிர்வாகம், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மைதான பராமரிப்பாளர்களிடம் என்ன வேலை? பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி நீங்கள் ஏன் பராமரிப்பாளர்களிடம் சொல்கிறீர்கள்? அது எப்படி இருக்க வேண்டும் என்பதை பராமரிப்பாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்”

“அவர்களது மனதுக்கு தரமான பிட்ச்சை உருவாக்க தேவையான சுதந்திரத்தை கொடுங்கள். அதில் வீரர்களை விளையாட மட்டும் அனுமதியுங்கள். இது போன்ற பிட்ச்களை இந்தியா விரும்பி கேட்டிருந்தால் பின்னர் அவர்கள் மீது எனக்கு எந்த கருணையும் கிடையாது. அடுத்த முறை அவர்கள் அவ்வாறு கேட்கும் போது உங்கள் வேலையை பாருங்கள் என்று மைதான பராமரிப்பாளர்கள் சொல்ல வேண்டும். இந்தியர்கள் அதைப் பற்றி வாயை மூடிக்கொண்டு கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்”
இதையும் படிங்க:IND vs AUS : ஆடுறது முன்னாள் வீரர்களா? பாகிஸ்தான்ல போய் பாருங்க – பிட்ச் விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மா கொடுத்த பதிலடி
“ஏனெனில் ஆஸ்திரேலியாவில் எப்படி சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வென்றோம் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா? மேலும் ரிசப் பண்ட் இல்லாதது இந்திய அணியில் பெரிய வித்யாசத்தை ஏற்படுத்துகிறது. அவர் எந்தளவுக்கு முக்கியமானவர் என்பதை இந்தியா தற்போது பார்க்கத் தொடங்கியுள்ளனர்” என்று கூறினார். அப்படி விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள இந்தூர் பிட்ச் மோசமாக இருந்ததாக அறிவித்து அதற்கு 3 கருப்பு புள்ளிகளை ஐசிசி தண்டனையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



