ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கி நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. மொஹாலியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 209 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் பந்து வீச்சில் படுமோசமாக செயல்பட்ட இந்தியா கையிலிருந்த வெற்றியை ஆத்திரேலியாவின் அதிரடியான பேட்டிங்க்கு பரிசளித்தது. இதனால் இத்தொடரின் கோப்பையை வெல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக முதல் போட்டியில் மொஹாலி மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்ததால் இரு அணிகளும் 200க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அதில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற ஆஸ்திரேலியா வென்றது.

ஆனால் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சம்பந்தமில்லாமல் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய பீல்டிங் துறையில் இந்தியா சொதப்பியதே முதல் போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் 61 ரன்கள் குவித்து தோல்வியை பரிசளித்த கேமரூன் கிரீன் 42 ரன்களில் இருந்த போது கொடுத்த 2 கேட்ச்களை தவற விட்ட இந்திய பீல்டர்கள் 45* ரன்களைக் விளாசி அதிரடியான பினிஷிங் கொடுத்த மேத்யூ வேட் வெறும் 1 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை தவற விட்டதால் வெற்றி பறிபோனது.
சுமாரான பிட்னெஸ்:
பொதுவாகவே அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அனைத்து வீரர்களாலும் சிறப்பாக செயல்பட முடியாது என்றே கூறலாம். ஆனால் கைக்கு வரும் கேட்ச்களை பிடித்து சிறப்பாக பீல்டிங் செய்வது ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் கடமை என்று கூறுவார்கள். மேலும் கேட்ச்சஸ் வின் மேட்ச்சஸ் என வல்லுநர்கள் தினந்தோறும் தெரிவித்தாலும் அதில் முன்னேறாத இந்தியா சமீப காலங்களில் இது போன்ற முக்கிய கேட்ச்களை கோட்டை விட்டு கையிலிருந்த வெற்றிகளை தவறு விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. இதனால் பீல்டிங் துறையில் முன்னேறாமல் உங்களால் உலக கோப்பையை வெல்ல முடியாது என ஜாம்பவான் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படையாகவே விமர்சித்தார்.

இந்நிலையில் இந்தியா போன்ற அதிக சம்பளம் கொடுக்கப்படும் அணியில் சில வீரர்கள் அதிகப்படியான எடையை கொண்டிருப்பதே சுமாரான பீல்டிங்க்கு காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகிலேயே இந்திய வீரர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களாக உள்ளனர். அவர்கள் அதிகப்படியான போட்டியில் விளையாடுகின்றனர். இருப்பினும் அவர்கள் ஏன் ஃபிட்டாக இருப்பதில்லை என்று சொல்லுங்கள்? அவர்களின் உடல் அமைப்பை ஒப்பிட்டு பார்க்கும் போது தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகள் மிகவும் சிறப்பாக உள்ளன”
“அத்துடன் இந்தியாவை விட சில ஆசிய அணிகள் உடல் தகுதியில் சிறப்பாக உள்ளதென்று நான் சொல்வேன். சில இந்திய வீரர்கள் அதிகப்படியான உடல் எடையைக் கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் அதில் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஏனெனில் அவர்கள் சிறந்த கிரிக்கெட்டர்கள். இது பற்றி மற்றவர்கள் பேசுவார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்திய அணியில் பிட்னஸ் சுமாராக உள்ளது. குறிப்பாக சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் சிறப்பாக பீல்டிங் செய்யும் அளவுக்கு ஃபிட்டாக இல்லை. உடல்தகுதி எப்படியிருக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டை விராட் கோலி மற்றவர்களுக்கு உருவாக்கினார். ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஃபிட்டாக உள்ளனர்”

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு பின் அறிமுகமாகி இன்று கோச்சாக திகழும் 6 முன்னாள் வீரர்கள்
“ஆனால் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் அதில் மந்தமாக உள்ளனர். ரிஷப் பண்ட்டும் அதில் உள்ளார். அவர்கள் மட்டும் ஃபிட்டாக இருந்தால் மிகவும் ஆபத்தான கிரிக்கெட் வீரர்களாக உருவெடுவார்கள். மேலும் முதல் போட்டியின் தோல்வியை பார்க்கும் போது உங்களிடம் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் உள்ளனர். உமேஷ் யாதவ் ஓரளவு சிறப்பாக பந்து வீசினார். ஆனால் ஹர்ஷல் படேல் 40க்கும் மேற்பட்ட ரன்களை கொடுத்தார். வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவருடைய பலம் ஸ்லோ பந்துகள் என்பது என்னால் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.



