ஐபிஎல் 2022 தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் 6-வது முறையாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அந்த அணியை 5 கோப்பைகளை வென்று கொடுத்த வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்தினார். அத்துடன் சென்னை உட்பட எஞ்சிய 9 அணிகளுக்கு கிடைக்காத சொந்த மண்ணில் விளையாடும் பொன்னான வாய்ப்பு மும்பைக்கு மட்டுமே பெற்ற போதிலும் 8 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்த அந்த அணி வரலாற்றில் முதல் 8 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்த முதல் அணியாக சாதனை படைத்து முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது.

மேலும் மொத்தமாக பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றில் முதல் முறையாக 10 தோல்விகளை பதிவு செய்த அந்த அணி முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானமான சாதனை படைத்தது. மொத்தத்தில் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சறுக்கிய அந்த அணிக்கு அடுத்த வருடம் சக்கை போடு போடும் வகையில் இந்த சீசனில் தேவாலட் ப்ரேவிஸ் போன்ற ஒருசில தரமான வீரர்களும் கிடைத்துள்ளனர்.
திலக் வர்மா:
அதில் மிக முக்கியமானவர் தான் திலக் வர்மா. ஹைதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2018 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் 2020 அண்டர்-19 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். தற்போது 19 வயது மட்டுமே நிரம்பிய உள்ள இவர் சமீப காலங்களில் சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் அசத்தியதால் 1.70 கோடி என்ற நல்ல தொகைக்கு மும்பை அணி நிர்வாகம் ஏலத்தின் போது வாங்கியது. அந்த நிலைமையில் ஆரம்பத்திலேயே சூரியகுமார் யாதவ் காயத்தால் பங்கேற்காத நிலையில் அவரின் 3-வது பேட்டிங் இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற இவர் ஆரம்ப முதலே தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

ரோகித் சர்மா, இஷன் கிஷன் போன்ற பெரிய வீரர்கள் சொதப்பிய நிலையில் பெரும்பாலான போட்டிகளில் மிடில் ஆர்டரில் அசத்தலாக பேட்டிங் செய்த இவர் மொத்தமாக பங்கேற்ற 14 போட்டிகளில் 2 அரைசதம் உட்பட 397 ரன்களை 36.09 என்ற சராசரியில் 131.02 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். குறிப்பாக சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை தடுமாறிய போது 34* (32) ரன்களை எடுத்த அவரை வரும் காலங்களில் இந்தியாவிற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் அளவுக்கு திறமை கொண்டுள்ளார் என்று அந்த போட்டியின் முடிவில் தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாகப் பாராட்டினார்.
சச்சின் பாராட்டு:
இந்நிலையில் மும்பையின் ஆலோசகராக இருக்கும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பாராட்டுகளையும் தற்போது திலக் வர்மா பெற்றுள்ளார். இதுபற்றி சமீபத்திய யூடியூப் வீடியோவில் சச்சின் பேசியது பின்வருமாறு. “திலக் வர்மா ஒரு நம்பகமான கிரிக்கெட்டர். இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் அவரிடம் நான் பேசினேன். அவரின் பேட்டிங்கில் சில ஆலோசனைகளை தெரிவித்தேன். அவர் தெளிவான எளிமையான மனநிலையுடன் நேர்மறை எண்ணங்களை கொண்ட நல்ல வீரர். பயிற்சிப் போட்டியில் அவரை பார்த்த போதே அவர் என்னை மிகவும் கவர்ந்தார்” என்று பாராட்டினார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் சுழல்பந்து வீச்சாளராகவும் இருக்கும் திலக் வர்மா இந்த வருட ஐபிஎல் தொடரில் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். இருப்பினும் வரும் காலங்களில் காட்டடி பேட்ஸ்மேன்களுக்கு பயந்து சுழல் பந்துவீச்சை கைவிட்டு விடாமல் பகுதி நேர பந்து வீச்சாளராக மாறுவதற்கு அவர் முயற்சிக்க வேண்டும் என்று சச்சின் கேட்டுக்கொண்டுள்ளார். அப்படி செய்தால் அவரின் எதிர்காலம் இன்னும் பிரகாசமாக இருக்கும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் அவர் ரன்களை வேகமாக ஓடி எடுக்கிறார். சில சமயங்களில் சுழல் பந்துகளை வீசுவதற்கு தயங்குகிறார். ஆனால் அவர் எந்த காரணத்திற்காகவும் அவருடைய பந்துவீச்சை கைவிட்டு விடக்கூடாது என்று பரிந்துரைக்கிறேன். ஐபிஎல் போன்ற தொடர்களில் அவர் ஒரு சில ஓவர்களை வீசலாம். மொத்தத்தில் அவர் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துள்ளார். கடினமாக உழைக்க கூடியவராக இருக்கும் அவர் அதை தொடர்ச்சியாக செய்தால் நிச்சயம் அவரின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்” என்று பாராட்டினார்.
இதையும் படிங்க : 1 லட்சம் ரசிகர்கள் விண்ணதிர்ந்த வந்தே மாதரம் முழக்கம் ! ஐபிஎல் நிறைவு விழாவில் – பிசிசிஐ கின்னஸ் சாதனை
முன்பெல்லாம் சச்சின், சேவாக், ரெய்னா போன்ற பேட்ஸ்மேன்கள் கூட பகுதிநேர பந்துவீச்சாளர்களாக எதிரணியினரை திணறடிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அது போன்ற வீரர்கள் பெரும்பாலும் இல்லை என்பதால் அந்த திறமையையும் திலக் வர்மா வளர்த்துக் கொண்டால் நிச்சயமாக சச்சின் கூறுவது போல அவரின் வருங்காலம் பிரகாசமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.



