1 லட்சம் ரசிகர்கள் விண்ணதிர்ந்த வந்தே மாதரம் முழக்கம் ! ஐபிஎல் நிறைவு விழாவில் – பிசிசிஐ கின்னஸ் சாதனை

AR Rahman IPL Jersey
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடர்களின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்ற 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக மும்பை, புனே, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வந்தது. இதில் முதலில் நடந்த 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய 4 அணிகள் மட்டும் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு சென்றன.

அதை தொடர்ந்து விறுவிறுப்பாக துவங்கிய நாக்-அவுட் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் ராஜஸ்தான் தோற்கடித்த குஜராத் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்த பெங்களூரு குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தானிடம் தோற்று முதல் கோப்பையை வெல்ல முடியாமல் வீட்டுக்கு பரிதாபமாக சென்றது.

- Advertisement -

மாபெரும் பைனல்:
அதை தொடர்ந்து இந்த மாபெரும் தொடரின் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை பார்ப்பதற்காக மதியம் முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அகமதாபாத் மைதானத்துக்கு வந்ததால் அந்தப் பகுதி முழுவதும் ரசிகர்கள் அடங்கிய கடல் போல காட்சியளித்தது. முன்னதாக கடந்த சில வருடங்களாக கரோனா காரணமாக ஐபிஎல் தொடக்க மற்றும் நிறைவு விழா நடைபெறாமல் இருந்து வந்தது.

அதற்கான செலவு தொகையை மருத்துவத்துக்கு நன்கொடையாக கொடுத்து வந்த பிசிசிஐ இந்த வருடம் கூட துவக்க விழாவை நடத்தவில்லை. ஆனால் தற்போது இந்தியாவில் நிலைமை சீரடைந்ததுள்ளதால் தமிழகத்தின் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் போன்ற நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிறைவு விழாவுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்தது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்த அகமதாபாத் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கே துவங்கிய அந்த கலை நட்சத்திர விழாவில் ஏஆர் ரகுமான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கச்சேரிகளை நடத்தினர்.

- Advertisement -

விண்ணதிர்ந்த முழக்கம்:
குறிப்பாக இந்தியாவின் ஒருமைப்பாட்டை விளக்கும் வந்தே மாதரம் பாடலையும் ஜெய் ஹோ பாடலையும் ஏஆர் ரகுமான் தனது காந்தக் குரலில் பாட அதற்கு ஈடாக ரன்பீர் கபூர் நடனம் செய்ய ஆமதாபாத் மைதானத்தில் கூடியிருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவர்களுடன் சேர்ந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினார்கள். அதனால் ஏற்பட்ட இந்திய அன்னையின் வெற்றி முழக்கம் விண்ணதிர செய்ததை பார்த்த ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் புல்லரிப்பு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து இன்று உலக கிரிக்கெட்டை தீர்மானிக்கும் உலகின் நம்பர் ஒன் டி20 தொடராகவும் பணத்தை கொட்டிக் கொடுக்கும் விளையாட்டு தொடராகவும் உருவெடுத்துள்ள ஐபிஎல் தொடர் 15-வது வருடத்தை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் பிசிசிஐ, ஐபிஎல் மற்றும் 10 அணிகளின் லோகோ அடங்கிய பிரம்மாண்ட வெள்ளை ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டது. அதை இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் தனது காந்தக் குரலால் ரசிகர்களை ஈர்த்துள்ள ரவி சாஸ்திரி தொகுத்து வெளியிட்டார்.

- Advertisement -

கின்னஸ் சாதனை:
மொத்தம் 66 மீட்டர் நீளமும் 42 மீட்டர் அகலமும் கொண்ட அந்த பிரம்மாண்ட ஜெர்சி உலகிலேயே உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஜெர்சி என்ற சாதனையுடன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இப்படி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கலைவிழா நிகழ்ச்சிகளுடன் உலக சாதனையுடன் கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் நிறைவு விழாவின் இறுதியில் இந்திய தேசிய கீதம் வாசிக்கப்பட்டது.

அதை இரு அணி வீரர்களும் மைதானத்தில் கூடியிருந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களும் சேர்ந்து பாடிய போது மீண்டும் விண்ணதிர்ந்த முழக்கம் ஒவ்வொரு இந்தியனுக்கும் புல்லரிப்பை கொடுக்கும் வகையில் அமைந்தது. இந்த கலை நிகழ்ச்சிகளால் 7.30 மணிக்கு வீசப்பட்ட டாஸில் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையும் படிங்க : மோசமாக பந்துவீசியதற்காக அப்பாவை இழுத்து திட்டிய ஆர்சிபி ரசிகர்களுக்கு எதிராக இந்திய வீரருக்கு குவியும் ஆதரவு

அதைத் தொடர்ந்து தங்களது முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்ல ஹர்திக் பாண்டியாவின் குஜராத்தும் 2008க்கு பின் 13 வருடங்கள் கழித்து 2-வது கோப்பையை வெல்ல ராஜஸ்தானும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.

Advertisement